‘ஆஸ்துமா இல்லாமல் வாழ முயற்சிப்போம்’

கோயமுத்தூர் ராமநாதபுரத்தில் ப்ரைம் ஸ்பெஸாலிட்டி கிளினிக் நடத்திவரும் நுரையீரல் டாக்டர் சந்தோஷ், ஆஸ்துமா பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து நம்மிடம் கூறியதாவது,

ஆஸ்துமா, சுற்றுச்சூழலில் உள்ள காற்று மாசுக்களால் நமது சுவாசக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு, சுவாசக்குழாய் சுருங்கும். இது ஒருவகையான அலர்ஜி நோயாகும். இதற்கு வயது வேறுபாடு கிடையாது. எல்லோருக்கும் பொதுவானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி தொடர்ந்து இருமல், நெஞ்சுப்பகுதி இறுக்கம், மூச்சுத்திணறல், மூச்சுவிடும்போது நுரையீரலில் விசில் போன்ற சத்தம் ஏற்படும். பெரும்பாலும் 60 முதல் 70 சதவீதம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு, இதுகூடவே தும்மல், மூக்கடைப்பு, மூக்கு எரிச்சல் போன்ற தொந்தரவுகளும் இருக்கும்.

இந்நோய் மூக்கில் அல்லது நுரையீரலில் என எதில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று நோய் அறிகுறிகளை மதிப்பிட்டு முதலில் சுவாசக்குழாய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் சிகிச்சை அளிக்கப்படும்.

வீசிங், ஆஸ்துமா என வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் இதன் பாதிப்புகள், இதற்கான சிகிச்சைகள் ஒன்றுதான். இந்நோய் வருவதற்கு, வெளிப்புறத்தில் மரம், செடிகளில் இருந்து வரக்கூடிய மாசுத் துகள்கள், வீட்டில் உள்ள தூசுக்கள், பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகளின் முடி போன்றவை ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணிகளாகும்.

பெற்றோர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால், அவர்களது சந்ததிக்கும் பாதிப்பு தொடரும் வாய்ப்பு இருந்தாலும், சுற்றுச்சூழலில் உள்ள மாசுபாடுதான் முக்கிய காரணம். இந்த வீக்கத்தன்மையுள்ள நோயானது, நுரையீரல் உள்ளிட்ட உடலின் பிற பாகங்களையும் பாதிக்கக்கூடியது என்பதால் இந்நோய் அறிகுறி தென்பட்டவுடன் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

இந்நோய் முற்றிலும் தீர்க்கக் கூடியதல்ல, கட்டுப்படுத்தக் கூடியது. எனவே, நம் உடலுக்கு எது ஒவ்வாமையாக இருக்கிறது என்பதை முதலில் கண்டறிந்து, அதனைத் தவிர்த்துக்கொள்வதன் மூலமும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இதனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நுரையீரல் நன்றாக இயங்கத் தொடங்கியவுடன் இந்நோயிலிருந்து விடுபடலாம். ஆனால் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் மீண்டும் இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

முட்டை, மீன், பால் பொருட்கள், பீனட்ஸ் போன்ற ஒருசில உணவுப் பொருட்கள் இந்நோய் காரணமாகலாம். இதுபோன்ற உணவுகளை எடுப்பதால் நமக்கு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் இவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஆனால், உணவினால் ஆஸ்துமா வராது. எனவே உணவுகளைத் தவிர்ப்பது தேவையற்றது. நமக்கு இது ஒத்துவராது என்று நினைப்பதைத் தவிர்த்துவிடுவது அவரவர் நலனுக்கு உகந்தது. குளிர்ச்சியான சூழல் மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்குத் தொந்தரவு தரும். அதனை உணர்ந்து தவிர்த்துவிட வேண்டும்.

ஆஸ்துமா இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்யும்போது சிலருக்கு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டால் தொந்தரவுகள் உடனே சரியாகிவிடும். மூச்சுப்பயிற்சியைத் தினமும் தொடர்ந்து செய்வதன்மூலம் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும், நோயும் கட்டுப்பாடுடன் இருக்கும். இதன்மூலம் இந்நோய் தீவிரமடையாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மருந்து, மாத்திரைகளைவிட ‘இன்ஹேலர்’, ஆஸ்துமாவிற்கு சிறந்த நிவாரணம். இதில் ரிலிவர், கன்ட்ரோலர் என இருவகையுள்ளது. இதனை மருத்துவர் பரிந்துரைப்படி உபயோகிக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் மருந்து சாப்பிட்டவுடன் இந்நோய் குணமாகும் என்று சொல்வதற்கில்லை.

ஆரோக்கிய நலம் காக்க:

முக்கியமாக புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது; சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது; சரியான தூக்கம்; மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி தொடர்ந்து செய்வது; ஒவ்வாமை உள்ள பகுதிகளை, உணவுகளைத் தவிர்க்க வேண்டும்; சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து தற்காத்துக்கொள்வது; கோயமுத்தூரைப் பொறுத்தவரையில் காட்டன், கோழிப்பண்ணை, ஃபௌண்டரி தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் இப்பகுதிகளில் உள்ளவர்கள் எப்போதும் முகக்கவசம் அணிவது; பயம், பதட்டம் காரணமாக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்; வீட்டிற்குள் ஊதுபத்தி, கொசுவத்தி, சாம்பிராணி புகை, சென்ட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்; தலையணை உறை, பெட்ஷிட் போன்றவற்றை சுடுதண்ணீரில் துவைத்து பயன்படுத்துவது போன்றவை ஆஸ்துமா நோயைத் தவிர்த்து கட்டுப்படுத்துவதற்கான முறைகளாகும்.

எங்களிடம் இம்யூனோ தெரபி, முதிர்நிலை நோய்க்கான சிகிச்சை போன்ற ஆஸ்துமா தொடர்பான சிகிச்சைகள் நவீன முறையில் தரமாக வழங்கப்படுகிறது’’ என்றார்.