திருப்புமுனையாகுமா திருச்சி மாநாடு..?!

திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடிய மாநாடு, அரசியல் ரீதியாக திருப்புமுனையை ஏற்படுத்துமா?! என்ற பேச்சு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. நீதிமன்றக் கதவுகள்,  தேர்தல் ஆணையக் கதவுகள் கிட்டதட்ட அடைக்கப்பட்ட நிலையில், மக்கள் மன்றத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார் ஓபிஎஸ்.

தொண்டர்கள் செல்வாக்கு இருந்தால் அதைக் கூட்டி நிரூபிக்க வேண்டியதுதானே என்றும், அவருடன் 10 பேர்கூட இல்லாததால்தான் மக்களிடம் செல்ல மறுக்கிறார் என்றும் ஓபிஎஸ்-ஐ சுற்றித் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துகொண்டே இருந்தன.

இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், 2001-இல் மாநில மாநாட்டைக் கூட்டி பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிகண்ட அதே திருச்சி ஜிகார்னர் மைதானத்தில் ‘புரட்சி மாநாடு’ எனும் பெயரில் தனது ஆதரவாளர் மாநாட்டைக் கூட்டி பலத்தைக் காட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.

களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:

திருச்சியில் திரண்ட அல்லது திரட்டியக் கூட்டத்தைப் பார்க்கும்போது, தான் அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கப்போவதில்லை என்றும்,  ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தனக்கு இருக்கும் ஆதரவு வளையத்தை எப்படியாவது நிரூபித்து தானும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துக்காட்டவும் ஓபிஎஸ் தயாராகிவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சட்டப் போராட்டத்தில் கட்சியின் கட்டமைப்பு, சின்னம்,  அலுவலகம் உள்ளிட்டவை முழுமையாக இபிஎஸ் வசம் சென்ற பிறகும், திருச்சியில் இப்படியொரு கூட்டத்தைக் கூட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் தானும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ்.

தொண்டர்களை மையப்படுத்தி…:

மாநாட்டில் ஓபிஎஸ்-இன் பேச்சு  முழுக்க முழுக்கத் தொண்டர்களை மையமாக வைத்துத்தான் இருந்தது. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், சாமானியத் தொண்டர்களுக்காகத்தான் அதிமுகவைத் தொடங்கினார்,  தலைமையைத் தேர்வு செய்யும் உரிமையையும் தொண்டர்களுக்குத்தான் எம்ஜிஆர் வழங்கினார் என்றும்,  ஜெயலலிதாவும் அதையே உறுதிப்படுத்தினார் என்றும் கூறி, ஆனால் அந்த உரிமையை இப்போது ஒரு கூட்டம் பண பலத்தால் பறித்துவிட்டது என்று இபிஎஸ் ஆதரவாளர்களை மறைமுகமாக சாடினார் ஓபிஎஸ்.

அதேபோல, இனிமேல் பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்றால், 10 மாவட்டச் செயலர்கள் முன்மொழிய வேண்டும்,  10 மாவட்டச் செயலர்கள் வழிமொழிய வேண்டும்,  தலைமைக்கழகப்  பொறுப்பில் 5 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும் என விதியைத் திருத்தியுள்ளதால் சாதாரண தொண்டர் யாரும் இனிமேல் கட்சிப் பதவிக்கு வர முடியாது,  மிட்டா, மிராசுதாரர்கள் மட்டும்தான் கட்சித் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்றார்.

எம்ஜிஆர் – ஜெயலலிதா வகுத்து வைத்த விதிகளைக் காப்பாற்றி மீண்டும் தொண்டர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவே தற்போது நான் தர்மயுத்தம் நடத்துவதாக ஓபிஎஸ் பேசியதும் மாநாட்டில் ஆரவார ஒலி எழும்பியது. அதேபோல,  எல்லா பதவிகளையும் எனக்கு ஜெயலலிதா தந்துவிட்டார்கள்,  இனிமேல் பதவி தேவையில்லை, தொண்டர்களுக்காகவே போராடுகிறேன் எனக்கூறி தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டியிருக்கிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் இலக்கு என்ன?:

ஈர்ப்பு சக்தி மிக்க எம்ஜிஆரால் கருணாநிதியிடம் இருந்த கட்சி,  நிர்வாகிகள் பலத்தை மீறியும் வாக்கு பலத்தை நிரூபித்து வெற்றி பெற முடிந்தது. அதேபோல, ஈர்ப்பு சக்தி மிக்க ஜெயலலிதாவால் வி.என்.ஜானகி வசம் இருந்த கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் பலத்தையும் மீறி அதிக  வாக்குகள் பெற முடிந்தது.

ஆனால், ஈர்ப்பு சக்தி இல்லாத இபிஎஸ் – ஓபிஎஸ் போன்ற தலைவர்களால் கட்சிக் கட்டமைப்பு, தொண்டர் செல்வாக்கு, மக்கள் அனுதாபம், ஜாதிய  பலம் உள்ளிட்டற்றை மையப்படுத்தித்தான் வாக்கு பலத்தை நிரூபிக்க முடியும் என்பதுதான் யதார்த்தம்.

ஜெயலலிதா அனுதாபம்:

இப்போதைக்கு கட்சிக் கட்டமைப்பு, நிர்வாகிகள் பலம் இபிஎஸ் வசம் இருந்தாலும், ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அமர்த்தப்பட்டவர், மீண்டும் அந்தப் பதவியை திருப்பி ஒப்படைத்தவர் என்ற அனுதாபம் அதிமுகத் தொண்டர்களிடமும்,  அனுதாபிகளிடமும் தனக்கு இருப்பதாக ஓபிஎஸ் எண்ணுகிறார். எனவே,  ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தன்பின்னால் திரட்ட முடியும் என்பது ஓபிஎஸ்-ன் நம்பிக்கை.

பிரதமர் வேட்பாளர் கணக்கு:

அடுத்து வரப்போவது மக்களவைத் தேர்தல் என்பதால் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் அணிக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அதிமுக – பாஜக கூட்டணி  உருவானாலும்,  தனது தலைமையில் உருவாகும் மூன்றாவது அணியால் அதிமுக – பாஜக,  திமுக – காங்கிரஸ் எதிர்ப்பு என்ற புள்ளியில் இருக்கும் வாக்குகளைப் பெற்று தனது பலத்தை ஓரளவு காட்டலாம் என எண்ணுகிறார். ஒருவேளை பாஜக தனித்துக் களம் காண விரும்பினால், தனது தலைமையில் பாஜக மற்றும் பிற அணிகள் வரும்போது பிரதமர் வேட்பாளர் என்னும் கூடுதல் பலம் கிடைக்கும்போது தனது வாக்கு பலத்தை கணிசமாக உயர்த்த முடியும் என ஓபிஎஸ் கருதக்கூடும்.

ஜாதிய முத்திரையைத் தவிர்த்த ஓபிஎஸ்:

எனவே, தான் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தாலும் மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முதல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார் ஓபிஎஸ். தன் மேல் ஜாதிய முத்திரை விழுந்துவிட்டால் தமிழகம் தழுவிய தலைவராகத் தான் எழுந்து வர முடியாது என்பதை அறிந்து, பழுத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற தலைவர்களின் ஆலோசனைப்படி சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மாநாட்டுக்கு அழைப்பதையும்,  தென்மாவட்டங்களில் மாநாட்டை நடத்துவதையும் ஓபிஎஸ் சாமர்த்தியமாகத் தவிர்த்திருக்கிறார்.

இருப்பினும், மாநாட்டில் பேசும்போது மூன்றாவது முறையாக முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவிடம் அந்தப் பதவியைத் திருப்பி ஒப்படைத்தேன் எனக்கூறி, தான் சசிகலாவுக்கு எதிரி இல்லை என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்.

டெல்டா, தென்மாவட்டங்கள்:

டெல்டா,  தென்மாவட்டங்களில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஓபிஎஸ்-ஐ தவிர்த்துவிட்டு அதிமுக – பாஜக கூட்டணியால் வெற்றி பெற முடியாது என்ற தோற்றத்தை திருச்சி மாநாடு, பாஜகவுக்கு உருவாக்கக் கூடும். அதிமுகப் பொதுச்செயலராக இருந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொகுதியிலும் தகுதி வாய்ந்த பல உள்ளூர் தலைவர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அதில் அனைவருக்கும் பதவி கொடுத்து அவர்களைக் கட்சிக்குள் கட்டுகோப்பாக இபிஎஸ்-ஆல் வைத்திருக்க முடியாது. எனவே, பதவி அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க இந்த மாநாடு உதவும் என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களின் நம்பிக்கை.

சேலத்தில்  அடுத்த மாநாடு:

திருச்சி மாநாடு வெற்றியடைந்துள்ளதாக ஓபிஎஸ் கருதுவதால் அடுத்து கொங்கு மண்டலம்,  வடதமிழகம் என மக்களவைத் தேர்தல் வரை தொடர்ந்து மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும் அதே நாளில் சேலத்தில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக அணி அமையாவிட்டால் 2019-இல் டி.டி.வி.தினகரன் பெற்ற 5.5 சதவீத வாக்குகளுக்கு மேல் தன்னால் பெற முடியும் என்றும்,  ஒருவேளை பாஜக அணி அமைந்தால் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தித் தன்னால் கணிசமான அளவு வாக்கு பலத்தை நிரூபிக்க முடியும் என்பது ஓபிஎஸ்-இன் கணக்கு.

2026 தேர்தலே குறி:

குறைந்தபட்ச வாக்கு எடுத்தால் 2026 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக போன்ற கட்சிகள் தன்னைத் தவிர்த்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அணியை வீழ்த்த முடியாது என்றும், ஒருவேளை பாஜக அணி அமைந்து கணிசமான வாக்கு பலம் கிடைத்தால் ஸ்டாலினை வீழ்த்தும் அணிக்குத் தலைமை ஏற்கத் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் ஓபிஎஸ்-இன் அசைக்க முடியாத  நம்பிக்கை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

“மக்களால் நான், மக்களுக்காக நான்’’ என்பது ஜெயலலிதாவின் கோஷம். ”தொண்டர்களால் நான்..,  தொண்டர்களுக்காகவே நான்..’ என்ற கோஷத்தை முன்னெடுத்திருக்கிறார் ஓபிஎஸ்.