தண்ணீர் எப்படி தீர்த்தமாகிறது?!

தண்ணீர் நம் தாகம் தணிப்பது மட்டுமல்லாமல், நமது ஆன்மீக வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை! தண்ணீரின் ஞாபக சக்தியால் அதன் தன்மை எந்த அளவிற்கு மாறுகிறது என்பதையும், நம் கலாச்சாரத்தில் தண்ணீரைக் கையாளும் விதத்திற்குப் பின்னால் மறைந்துள்ள விஞ்ஞானத்தையும் சத்குரு விளக்குகிறார்.

கேள்வி: சத்குரு, நமது கலாசாரத்தில் தண்ணீருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? யாரையாவது உபசரிக்கும்போது முதலில் தண்ணீர் தருவது, கோவிலில் தீர்த்தம் வழங்குவது, நதிகளைத் தாயாக வணங்குவது என்று நிறைய இருக்கின்றனவே?

சத்குரு: தண்ணீருக்கும் ஞாபக சக்தி என்பது இருக்கிறது. கையாள்பவருடைய எண்ணங்களை அது தனது நினைவில் வைத்துக்கொள்கிறது. எனவேதான் “யார் எது கொடுத்தாலும் குடிக்கக் கூடாது, சாப்பிடக் கூடாது, வீட்டில் வந்துதான் சாப்பிட வேண்டும் அல்லது கொடுப்பவர்கள் குணம் அறிந்து பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று வயதானவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

இப்போது இந்த நீரை நான் அன்பாக ஆனந்தமாகப் பார்த்து உங்கள் கையில் கொடுத்து நீங்கள் குடித்தால் உங்களுக்கு இருக்கிற நோய் போய்விடும். அதேநேரத்தில் நான் ரொம்பவும் கோபமாக, விரக்தியாக கொடுத்தால் இதைக் குடித்து நாளை காலைக்குள்ளேயே உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்னை வரும். இது மூடநம்பிக்கை இல்லை. இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் வீட்டில் வந்துவிழும் குழாய்த் தண்ணீர் ஒருவிதமான நிலையில் இருக்கிறது. ஆனால் நீங்களே ஆற்றில்போய் ஒரு வாய் அள்ளிக் குடித்தால் அந்தத் தண்ணீர் உங்களுக்கு வேறு ஒரு அனுபவத்தைக் கொடுக்கும். ஏனெனில் இரண்டிற்கும் வெவ்வேறு விதமான ஞாபக சக்தி இருக்கிறது.

முன்பெல்லாம் எப்போதும் வீட்டில் ஒரு பெரிய செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அந்தப் பாத்திரத்தின் வெளிப்புறம் விபூதியைத் தண்ணீரில் குழைத்து இட்டிருப்பார்கள். அந்தப் பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து பக்தியாகக் குடித்துக்கொள்ள வேண்டும்.

நாம் ஒருமுறை 90 நாள் வகுப்பு நடத்தினோம். அதில் பங்குபெற ஒருவர் முடிவெடுத்திருந்தார். அது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் நான் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த அம்மா என்னை மிகவும் கோபத்தோடு வரவேற்று ‘குடிங்கள்’ என்று தண்ணீர் கொடுத்தார்கள். “ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறீர்கள், இந்த நிலையில் நான் உங்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மாட்டேன்” என்றேன்.

உடனே அவர், “இதில் என்ன விஷமா கலந்திருக்கிறது?” என்று கேட்டார்.

“நீங்கள் குடித்துவிட்டு என்னிடம் கொடுங்கள்” என்றேன். அவர் சிறிது குடித்துவிட்டு, ‘இதுக்கென்ன’ என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். நான் கொஞ்சநேரம் கையில் வைத்துவிட்டு அப்புறம் கொடுத்தேன். “அம்மா, இப்போது குடித்துப் பாருங்கள்” என்று சொன்னேன். குடித்தார்கள்.  “ஓ!” என்று அழ ஆரம்பித்தார்கள். “என்னம்மா” என்று கேட்டால், “இப்போது இனிப்பாக இருக்கிறது” என்றார்கள். “அப்படித்தாம்மா, உங்கள் உயிர்த்தன்மையைப் பொறுத்து இந்த நீரும் தன்னை மாற்றிக்கொள்கிறது.

உங்கள் உயிர்த்தன்மை இனிப்பாக இருந்தால் உள்ளமும் இனிப்பாகஇருக்கும். இன்னொருவிதமாக இருந்தால் அது மிருகமாக நடந்துகொள்கிறது” என்றேன்.

இதேபோல் உங்கள் கணவரை நான் இனிப்பாக பண்ணி அனுப்பினால் எனக்கா பயன்? உங்களுக்குத்தானே?” என்றேன். அவரும் ஒத்துக்கொண்டார்.

நம் உடம்பில் 70% தண்ணீர்தான். எனவே உங்கள் உடம்பில் சேரும் நீரை நீங்கள் இனிப்பாகப் பார்த்துக்கொள்ளும்போது நீங்கள் ஆனந்தமாகவும், இந்த நீர் கசப்பாக மாறும்போது கசப்பானவராகவும் இருப்பீர்கள்.

எனவே, சக்தியான கோவில்களில் தீர்த்தம் வாங்கிக் குடிப்பதும், புனிதமான ஆறுகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வீட்டில் வைத்துக்கொண்டு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதும் இந்த காரணங்களால் ஏற்பட்டவைதான்’ என்றார்.