ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் 32வது கல்லூரி தினவிழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 32வது கல்லூரி தினவிழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பெங்களூருவில் உள்ள லேபர்நெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் காயத்ரி வாசுதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்வில் கல்லூரியின் உயிர் வேதியியல் துறைத்தலைவர் சித்ரா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் சித்ரா கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, பெண்கள் தங்கள் முன் இருக்கும் தடைகளைத் தகர்த்து முன்னேறப் பக்கபலமாக இருப்பது கல்வி மட்டுமே. கல்வியின் துணை கொண்டு தங்கள் வாழ்க்கையையும், சமூகத்தையும் மேம்படுத்தப் பெண்களால் முடியும் என்றார். சிறப்பு விருந்தினர் காயத்ரி வாசுதேவன் பேசுகையில், புதுமைகளையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளத் தயங்காதீர்கள் என்றதோடு, கல்வியை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளைத் தன்னம்பிக்கையோடு பெண்கள் முன்னெடுக்கும்போது ஒரு சமூகம் நிச்சயமாக முன்னேறும் என்றார்.

கல்வி, ஆய்வு, விளையாட்டு போன்றவற்றில் சிறந்த மாணவியருக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. சிறந்த மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் பெஸ்ட் அவுட் கோயிங் விருதினையும்  வழங்கினார். மேலும், ஆய்வுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவியர் பங்களிப்பில் சாதனை படைத்த துறைகளும் பாராட்டப்பட்டனர்.