ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் காய்கறி சாகுபடி குறித்து இலவச பயிற்சி

தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் மார்ச் 25ம் தேதி நடைபெற உள்ளது.

செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெறும் இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

குறிப்பாக, காய்கறி சாகுபடியில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது, பல பயிர் சாகுபடி மூலம் வருவானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள், பூச்சி கொல்லிகளின் செலவில்லாத விவசாய வழிமுறைகள், வரப்பு பயிர்களின் பயன்கள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் புதிய உத்திகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

மார்ச் 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.