பிரிகால் நிறுவனத்தின் லாபம் ரூ.85.13 கோடியாக உயர்வு

கடந்த நிதி ஆண்டில் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 124.29 சதவீத வளர்ச்சி

மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் பிரிகால் நிறுவனம் 2023–ம் நிதி ஆண்டின் 9 மாத காலத்திற்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது.

இதில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம் 85.13 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதிஆண்டில் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 124.29 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக 2023–ம் நிதி ஆண்டின் 3 வது காலாண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளில் இதன் செயல்பாடுகள் மூலம் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 16.07 சதவீதம் உயர்ந்து 458.16 கோடி ரூபாயாகவும், வட்டி, வரி, தேய்மானம், மற்றும் கடன் அடைப்புக்கு முந்தைய வருவாயானது 8.38 சதவீதம் உயர்ந்து 51.81 கோடி ரூபாயாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 54.27 சதவீதம் அதிகரித்து 26.76 கோடி ரூபாயாக உள்ளது.

இதே போல் பகுதி வாரியாக பார்க்கையில், நடப்பு நிதி ஆண்டின் 9 மாதங்கள் முடிவில் இதன் செயல்பாடுகள் மூலம் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 27.07 சதவீதம் உயர்ந்து 1,393.15 கோடி ரூபாயாகவும், வட்டி, வரி, தேய்மானம், மற்றும் கடன் அடைப்புக்கு முந்தைய வருவாயானது 27.15 சதவீதம் உயர்ந்து 173.46 கோடிரூபாயாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 124.29 சதவீதம் அதிகரித்து 85.13 கோடி ரூபாயாக உள்ளது.

இந்நிறுவனத்தின் ‘ஆட்டோ எக்ஸ்போ 2023’ கண்காட்சியில் மின்சார வாகனங்களுக்கான புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்நிறுவனம் உற்பத்தி செய்துவ ருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி இந்திய தொழில் கூட்டமைப்பு 50 நிறுவனங்களில் சிறந்த நிறுவனமாக இந்நிறுவனத்தை தேர்வு செய்து தொழில்துறை கண்டுபிடிப்புவிருது 2022 என்னும் விருதை வழங்கி உள்ளது.

இது குறித்து நிர்வாகம் சார்பில் கூறுகையில், மின்சார வாகனங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ள சூழலில் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து வாகனப்பிரிவுகளிலும் பயன்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எங்களுக்கு முக்கிய ஐசி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் காரணமாக எங்களுக்கு கடுமையான ஐசி பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக முக்கிய உதிரிபாகங்கள் உற்பத்தியில் சில பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை எங்களால் முறையாக நிறைவேற்ற முடியவில்லை. இது எங்கள் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியதோடு, பல்வேறு காரணங்களால் கூடுதலாக இன்னும் பிறசெலவுகளும் ஏற்பட்டது.

இவை எங்களின் அடிமட்டம் வரை பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் எங்களின் கூட்டு முயற்சியின் காரணமாக இந்த சவால்களை எல்லாம் நாங்கள் சமாளித்து, நடப்பு நிதிஆண்டின் 3 வது காலாண்டில் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

இதே போன்றதொரு சிறப்பான செயல்பாடுகள் வரும் காலாண்டுகளிலும் தொடரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.