தொடரும் சிறுதுளியின் சுற்றுசூழல் பணிகள்

ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ பிரிவின் கீழ் விருது வழங்கினார். இதில் சான்றிதழுடன் ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

நீர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, கழிவு மேலாண்மை, விவசாயத்தை மேம்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை சிறுதுளி அமைப்பு செய்து வருகிறது.

இந்நிலையில் பரிசாக வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் வன எல்லைக்கு மிக அருகில் உள்ள நரசீபுரம் பகுதியில் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள பல தடுப்பு அணைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை தூர்வாருவதுடன் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுதுளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என நம்புவதாகவும் கூறினர்.

நீர்நிலைகளில் விடப்படும் கழிவுநீர், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் நல்ல மழைநீரையும் மாசுபடுத்தி நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது. எனவே, இனிவரும் காலத்தில் நிலத்தடி நீரின் தரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் என சிறுதுளி அமைப்பு தெரிவித்துள்ளது.