“காவல் நிலையங்களில் புகார்களை பதிவு செய்ய பிரத்யேக மென்பொருள்”

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவை மாநகர காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பதிவு செய்ய பிரத்யேக மென்பொருள் பிப்ரவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல்துறையில் 10 க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள் உள்ளன. இங்கு தினமும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக புகார்கள் வருகின்றன.

புகார் அளிக்க வருபவர்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை, மனுக்கள் மீதான விசாரணை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மதிப்பெண் முறை மாநகர காவல்துறையினரால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகர போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு மேம்படுத்தப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த பிரத்யேக மென்பொருள் மூலம் புகார் மீதான நடவடிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய முடியும் என்றும், மேலும் கட்டுப்பாட்டு அறை காவலர்கள் மூலம் புகார் அளித்து செல்லும் பொதுமக்களிடம், போலீஸ் நிலையங்களின் செயல்பாடு குறித்து விசாரிக்கும் கேள்வி முறைகளும் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.