தொடர்ந்து 24 மணிநேரம் பேசி நோபல் உலக சாதனை படைத்த பி.எஸ்.ஜி மாணவர்!

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவர் கார்த்தி திருமூர்த்தி, ‘தமிழும் தமிழர்களும்’ என்ற தலைப்பில் தொடர்ந்து 24 மணிநேரம் பேசி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கலிக்க நாயக்கன்பாளையம் நாகினி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 20 ஆம் தேதி காலை 10.16 மணியளவில் தொடங்கி, 21 ஆம் தேதி காலை 10.16 மணிவரை தொடர்ந்து 24 மணிநேரம் 1 நிமிடம் பேசி தனது பேச்சுத் திறனை வெளிப்படுத்தி உள்ளார். பேசிய நேரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு, அவரது சாதனைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி குறித்த அறிமுகம், அதன் பெருமை மற்றும் சிறப்புகள், தமிழர்களின் பாரம்பரியம் பற்றி பேசியுள்ளதோடு, குமரிகண்டம், அகத்தியம், தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என 7 உட்தலைப்புகளில் ஒவ்வொன்றையும் விவரித்து பேசியுள்ளார்.

இப்போட்டியில் கலந்துகொண்டது குறித்தும், தமிழ் மொழி மீதான ஆர்வம் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டது: சிறுவயதிலேயே நான் பேச்சு போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்தேன். 3 ஆம் வகுப்பு படிக்கும் போதே போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 9 ஆம் வகுப்பில் எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்த முருகேசன், பேச்சுப்போட்டிகளில் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.  நான் தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொள்ள அவர் ஒரு முக்கியக் காரணம்.

24 மணிநேரம் தொடர்ந்து பேச ஒரு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் நின்றுக் கொண்டே பேசுவது சற்று சிரமமாக இருந்தது. தூக்கம், பசியைக் கட்டுப்பாட்டில் வைத்தல், படித்ததை நினைவில் வைக்கும் திறன் ஆகியவற்றை பயிற்சி செய்தேன்.

போட்டியில் பொன்னியின் செல்வன் கதையை கிட்டத்தட்ட 9 மணிநேரம் தொடர்ந்து பேசினேன். நம் உயிர்மேல் எந்தளவு ஆசை இருக்குமோ, அதே அளவு தாய்மொழி மீதும் ஆசை இருக்கவேண்டும் என்ற காரணத்தினால், பேசும்போது தண்ணீர், பசி போன்ற விசயங்கள் தனக்கு சிரமமாக இல்லை என கூறுகிறார்.

முதலில் பேசும்போது ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஒரே மாதிரியாக பேசினேன். எனது பேச்சின் முடிவில் மட்டும் ஏற்ற, இறக்கம், ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசினேன். இந்த சாதனைக்கு அடுத்த படியாக லாங்கஸ்ட் லேக்சர் மாரத்தான் என்ற 130 மணிநேரம் தொடர்ந்து பேசும் போட்டியில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். அதற்கான பயிற்சியை தற்போது தொடங்கியுள்ளேன். குடும்பத்தினர் மற்றும் கல்லூரி எனக்கு மிகுந்த ஆதரவு அளித்து எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

மேலும் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே, எழுத்தாளர் கல்கியின் புத்தகங்களைப் படித்த பின்னரே எனக்கு ஏற்பட்டது. புத்தகம் படிப்பது வாழ்வியலுடன் தொடர்புடைய இணக்கமான விசயமாகவே எனக்கு இருக்கும். கவிதை, புதுக்கவிதை, பாரதியின் பாடல்களை படிப்பது மிகவும் பிடிக்கும். 63 நாயன்மார்களைப் பற்றிய கதைகளை படிக்கவேண்டும் என மிகுந்த ஆசை உள்ளது. அதை படிக்கத் தொடங்கியுள்ளேன் என்கிறார் கார்த்தி.

தமிழ் மொழியால் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் தாய்மொழியின் மீது ஆசை வைக்கவேண்டும் எனக்கூறும் இவர், மொழி மீது இருக்கும் விருப்பங்களை வெளிக்கொண்டு வாருங்கள் என தெரிவிக்கிறார். மொழியை என்றும் விட்டுக்கொடுக்க வேண்டாம் எனவும், உணர்வில் துவங்கிய தமிழ்மொழி ஈடு இணையற்றது எனவும் பெருமிதம் படக் கூறுகிறார்.