அறநிலையத்துறை அர்ச்சகர் பயிற்சி கல்லூரிகளை துவங்க வேண்டும்

-வானதி சீனிவாசன்

சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் போல, திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளும் செயல்பட வேண்டும் என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் ஐந்து கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை, ஜனவரி 21-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு திருக்கோயிலும் தனித்தனியானவை. அதற்கென அமைக்கப்படும் அறங்காவலர் குழுதான் அதனை நிர்வகிக்கும். அதனால், திருக்கோயிலின் சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளையும், அந்த அறங்காவலர் குழுதான் நிர்வகிக்க வேண்டும். அதுதான் சரியானது. ஆனால், மேற்பார்வையிட வேண்டிய இந்து சமய அறநிலையத் துறையே அனைத்து முடிவுகளை எடுப்பதும், இதில் மதச்சார்பற்ற தமிழக அரசு தலையிடுவதும் சரியானதும் அல்ல.

திருக்கோயில்கள் சார்பில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் துவங்கப்படுவது வரவேற்கத்தக்கவை. திருக்கோயில்களின் உபரி நிதியில், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் துவங்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் விருப்பம்.

ஆனால், திருக்கோயில்கள் சார்பில் துவங்கப்படும் கல்வி நிலையங்கள், அரசின் மற்ற கல்வி நிலையங்களைப் போல மதச்சார்பற்றதாக இருக்க கூடாது. மற்ற மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறதோ அந்த சுதந்திரம் இருக்க வேண்டும். எந்த திருக்கோயில் சார்பில் கல்வி நிலையம் தொடங்கப்படுகிறதோ, அதில் அந்த திருக்கோவில் தொடர்புடைய சம்பிரதாயம் கற்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் நிதியில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரியில், பட்டப்படிப்புடன் சைவ சித்தாந்தம் பற்றி மாணவர்கள் அறியும் வகையில் பாடத்திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும்.

இளநிலை அறிவியல், இளநிலை கலை பட்டப் படிப்புகளுடன் சைவ சித்தாந்தம் பற்றிய சான்றிதழ் படிப்பை மட்டும் நடத்தி ஏமாற்றும் தந்திரம் கூடாது. சைவ சித்தாந்தம் பற்றிய பட்டப்படிப்பும் இருக்க வேண்டும். அதுபோல வைணவ திருக்கோயில் நிதியில் தொடங்கப்படும் கல்லூரியில் அது தொடர்பான படிப்புகள் தொடங்க வேண்டும். தமிழகத்தில் பல சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் அப்படித்தான் நடக்கின்றன. சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் போலவே, திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளும் நடத்தப்பட வேண்டும். மதச்சின்னங்கள் அணிந்து வருவதையும், பாரம்பரிய ஆடைகள் அணிந்து வருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

இப்படி நடத்துவது கடினம் என மதச்சார்பற்ற அரசு நினைத்தால், திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகள் பல நூற்றாண்டுகளாக செயல்படும் ஆதினங்கள், மடங்களிடம் ஒப்படைக்கலாம்.

இந்து சமய அறநிலையத்துறை அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. திருக்கோயில் அர்ச்சகராக ஆறு மாதங்கள், ஓராண்டு என குறுகிய கால படிப்புகள் போதாது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அர்ச்சகர் பயிற்சி கல்லூரிகளை துவங்க வேண்டும். இதில், 6-ம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை, வழக்கமான கல்வியுடன் இந்து மதம், ஆகமம், வேதங்கள், பன்னிரு திருமுறைகள், திவ்யபிரபந்தம் ஆகியவையும் கற்றுத்தரப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும். இல்லையனில் அப்படியொரு துறையை தேவையில்லை. மற்ற மதத்தினருக்கு உள்ளதுபோல, இந்துக்களுக்கும் தங்களது திருக்கோயில்களை நிர்வகிக்கவும், அதன் மூலம் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நடத்தும் சுதந்திரமும் வேண்டும். அதுதான் உண்மையான மதச்சார்பின்மை. என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.