சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது: கோவை மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

– வனிதா மோகன் பெருமிதம்

குடியரசு தினம் அன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதினை கோவை சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பெற உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் ரவி வெளியிட்டுள்ளார்.

கோவையின் நீர் வளத்தைக் காப்பாற்ற உருவான ‘சிறுதுளி’ அமைப்பு கடந்த 20 வருடமாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரணாக விளங்கி வருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெறுவது குறித்து கேட்டபோது வனிதா மோகன் பகிர்ந்து கொண்டது: இந்த விருது கோவை மக்களுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரம் என நினைக்கிறேன். 2003 இல் சிறுதுளி துவங்கப்பட்டது. அப்போது இருந்தே மக்களின் ஆதரவும், அரசாங்கத்தின் ஆதரவும் எங்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இவர்களின் ஆதரவு இல்லை என்றால் எங்களது பணியை தொடர்ந்து செய்திருக்க முடியாது.

உன்னதமான ஒரு விசயத்தை செய்யும் போது கோவை மக்கள் அதற்கான அங்கீகாரத்தையும், ஆதரவையும் வழங்குவார்கள். அந்த ஆதரவினால் தான் இவ்விருது கிடைத்துள்ளது எனக் கூறினார்.

மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த சில தகவல் பற்றி கேட்டபோது அவர் கூறியது: சிறுதுளி அமைப்பின் சார்பில் கோவையில் கிட்டத்தட்ட 7 லட்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது. எங்களது கணிப்பின் படி, 16 – 17 சதவீதத்திற்கும் குறைவான மரங்களே நம் ஊரில் உள்ளன. இந்த சதவீதம் மிகவும் குறைவானது. எந்த ஒரு பகுதியிலும் 33 சதவீதம் வனப்பரப்பு இருக்கவேண்டும் என்றார்.

குளம், குட்டைகளை தூர்வாரும் பணிகளையும், அடர்வனம் உருவாக்கும் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். பல பகுதிகளில் சாக்கடை நீர் பெரியளவில் குளம், குட்டை, ஆறுகளில் கலக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு மாசடைகிறது.

நீர் நிலைகளில் கலக்கும் சாக்கடை நீரை தடுப்பதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த சில வருடங்களாக ஆலோசித்து வருகிறோம். இதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

எங்கெல்லாம் கழிவுநீரால் நீர் நிலைகள் மாசுபடுகிறதோ, அங்கு ஒரு சில இடங்களில் மாதிரி அமைக்க ஆலோசித்து வருகிறோம். அதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு இடத்திலும் கழிநீரின் தன்மை மாறுபடும். அதற்கேற்ப சுத்திகரிப்பு செய்யவேண்டியிருக்கும்.

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரி, பி.எஸ்.ஜி ஐ டெக், சக்தி இன்ஸ்டிடியூட் ஃஆப் டெக்னாலஜி ஆகிய 4 கல்லூரிகளுடன் இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கலந்தாலோசித்து வருகிறோம்.

இதன் மூலம் ஒரு தீர்வு கண்டறியப்படும். தற்போது இந்த திட்டம் துவக்க நிலையில் உள்ளது. கூடிய விரைவில் ஏதோ ஒரு பகுதியில் முன்னோடி திட்டம் தயாரித்து அமைக்கப்படும். இப்படி அமைக்கும் போது, சில பகுதிகளில் சுத்திகரிப்பு நீரை விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும் என விளக்குகிறார்.

கோவையின் நீர் ஆதாரம் தற்போது வெகுவாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், குளங்களை தூர்வாரியதால் நீர் அதிகளவு சேமிக்கப்பட்டுள்ளது. எங்கள் அமைப்பின் மூலம் 8 மில்லியன் கொள்ளளவு சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குளங்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கும் எனக் கூறினார்.

சுற்றுசூழலுக்கு அவசியம் செய்யவேண்டியது!

தண்ணீர் சிக்கனம், மரங்களை நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் அதை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல் ஆகியவை ஒவ்வொரு மனிதரும் சுற்றுசூழலுக்காக அவசியம் செய்யவேண்டிய விசயம்.

பிளாஸ்டிக்கினால் நீர் நிலைகள் அதிகம் மாசடைகின்றன. எனவே அதை கட்டுப்படுத்துவது முக்கியம்.  தண்ணீர் ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று. அந்த தேவைக்கு நாம் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் வனிதா மோகன்.