வருவாய் துறை சார்பில் ரூ.23,19,319 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்

கோவையில் வருவாய் துறை சார்பில் 111 பயனாளிகளுக்கு ரூ.23,19,319 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோர் வழங்கினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலும், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையிலும், வருவாய் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, 34 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாவும், 51 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையும், 11 பயனாளிகளுக்கு உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறையின்கீழ், 111 பயனாளிகளுக்கு 23,19,319 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முன்னதாக வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக்கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் ஆணையாளர் பிரபாகர், நில நிர்வாக ஆணையாளர் நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட ஆணையாளர் வெங்கடாச்சலம், வாருவாய் நிர்வாகம் இணை ஆணையாளர் ஜான் லூயிஸ், மாவட்ட ஆட்சியர் சமீரன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.