க்ளென்மார்க் நிறுவனம் சார்பில் இதய பாதிப்பு உள்ளவர்களுக்கான புதிய மாத்திரை அறிமுகம்

சமீப காலமாக இந்தியாவில் இதய பிரச்சினையால் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் ‘சாகு வி’ என்னும் பெயரில் புதிய மாத்திரையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த மாத்திரையை இதய பாதிப்பு உள்ள நோயாளிகள் நாள் ஒன்றுக்கு இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட காலமாக இதய பாதிப்பு உள்ள நோயாளிகள் இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், இறப்புகள் வெகுவாக குறைக்கப்படுவதோடு, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதும் வெகுவாக குறையும்.

இந்த புதிய மாத்திரையை அறிமுகம் செய்து பேசிய க்ளென்மார்க் நிறுவனத்தின் இந்திய வர்த்தக பிரிவு தலைவரும், நிர்வாக துணைத் தலைவருமான அலோக் மாலிக் கூறுகையில், இதய செயலிழப்பு என்பது இந்தியாவில் ஆபத்தான விகிதத்தில் வளர்ந்து வருகிறது. அதன் பாதிப்பு என்பது சுமார் 1 சதவீதமாக உள்ளது. குறைந்தபட்சம் 80 லட்சம் முதல் 1 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நாங்கள் தற்போது அறிமுகம் செய்துள்ள சாகு வி மாத்திரை இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு சிறந்த ஒன்றாகும். குறைந்த விலையில் நாங்கள் அதை அறிமுகம் செய்திருக்கிறோம். இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்கு செல்வதை வெகுவாக குறைப்பதோடு, இதய செயலிழப்புடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கும் என்று தெரிவித்தார்.

இந்த மாத்திரைகள் சமீபத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் 50 மில்லி கிராம் மாத்திரை ஒன்றின் விலை 19 ரூபாயும், 100 மில்லி கிராம் மாத்திரையின் விலை 35 ரூபாயும் ஆகும். இதன் 200 மில்லி கிராம் மாத்திரை விலை 45 ரூபாய் ஆகும்.