அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த பள்ளி இரண்டாமிடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

சட்டீஸ்கரில் உள்ள ஓ.பி. ஜிண்டல் பள்ளியில் ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன. மண்டல அளவில் முதலிடம் பிடித்த அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டன.

19 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர் பிரிவில், எட்டு மண்டலங்களிலிருந்து தேர்வு பெற்ற எட்டு அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டிகளில், சச்சிதானந்த பள்ளி, முதல் போட்டியில் சட்டீஸ்கர் ஓ.பி. ஜிண்டல் பள்ளியிடம் தோற்றது.

இருப்பினும், குஜராத் டிவைன் சைல்டு பள்ளி மற்றும் பூனே எஸ்.என்.பி.பி. பள்ளிகளை வென்று அரையிறுதிச் சுற்றில் நுழைந்தது. அரையிறுதியில் குஜராத் டிவைன் சைல்டு பள்ளியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஓ.பி. ஜிண்டல் பள்ளியுடன் நடந்த இறுதிப் போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவர் அணி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வௌ்ளிப் பதக்கத்தைப் பெற்றது.

19 வயதிற்குட்பட்டோருக்கான மாணவியர் பிரிவில், மண்டல அளவில் வெற்றி பெற்ற ஆறு அணிகள் கலந்து கொண்டன. சச்சிதானந்த பள்ளி மணவியர் அணி, பூனே எஸ்.என்.பி.பி. பள்ளியை வென்று அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் ஹரித்வார் எஸ்.ஆர்.வி.எம் பள்ளியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஓ.பி. ஜிண்டல் பள்ளியுடன் நடந்த இறுதிப் போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவியர் அணி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வௌ்ளிப் பதக்கத்தைப் பெற்றது.

அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் மாணவர் மற்றும் மாணவியர் ஆகிய இரு அணியினருக்கு, ராய்கர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிஷேக் சர்மா கோப்பைகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில், ஓ.பி. ஜிண்டல் பள்ளி முதல்வர் திரிவேதி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் கவிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் மற்றும் மாணவியர் ஆகிய இரு அணியினரையும், பள்ளியின் உதவி உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஹாக்கி பயிற்சியாளரான அனிதா மற்றும் யோகானந் ஆகியோரையும், சச்சிதானந்த பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.