ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி சலுகை அதிகரிப்பிற்கு சைமா வரவேற்பு

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான மறைமுக வரிகளை நீக்கும் RODTEP திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்த பத்திரிக்கை குறிப்பில் சைமா தலைவர் கூறியிருப்பது: ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்கள் மற்றும சைமா உள்பட தொழில் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று RODTEP ஏற்றுமதி சலுகையின் விகிதத்தை கூட்டியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோருக்கு நன்றி.

பருத்தியால் நெய்த துணி மீது 4.3 சதவீத RODTEP ஏற்றுமதி சலுகை அறிவித்த நிலையில் பின்னலாடை துணிக்கு ஒரு சதவீதம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. லைக்ரா கலந்த பின்னலாடை துணிக்கான RODTEP ஏற்றுமதி சலுகை ஒரு சதவீத்திலிருந்து 2.5 சதவீதமாகவும், 100 சதவீத பருத்தி பின்னலாடை துணிக்கு 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 16 இல் இருந்து செப்டம்பர் 30 வரை ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஜவுளிப் பொருட்களுக்கு புதிய ஏற்றுமதி சலுகை விகிதங்கள் பொருந்தும். டெனிம், பாலியஸ்டர் பஞ்சினால் ஆன நூல் போன்றவற்றிற்கான RODTEP ஏற்றுமதி சலுகையின் சதவீதத்தை உயர்த்தியதற்கும், விஸ்கோஸ் ரேயான் பஞ்சினால் ஆன நுாலிற்கான RODTEP ஏற்றுமதி சலுகையினை 0.9 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகவும், அதன் உச்ச வரம்பை கிலோ ஒன்றிற்கு 6 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.

மேலும் செயற்கை இழைகளால் ஆன துணிகளுக்கான RODTEP ஏற்றுமதி சலுகையினை 1.2 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட RODTEP ஏற்றுமதி சலுகை இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியை பெருக்கும் என்று தெரிவித்துள்ளார்.