வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு யுபிஐ அனுமதி

அமெரிக்கா, கனடா, ஐக்கிய உள்பட 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியாவின் பெரிய மைல்கல்லாக யுபிஐ பணபரிவர்த்தனை உள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வெளிநாட்டு கைப்பேசி எண்ணை பயன்படுத்தி இந்திய வங்கிக் கணக்குகளுக்கு, கைப்பேசி பணப்பரிவர்த்தனை செயலியான யுபிஐ மூலம் இனி ரூபாயில் பண பரிவர்த்தனையை செய்யலாம்.

இந்த சேவை விரைவில் தொடங்க உள்ளது.

இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச கைப்பேசி எண் மூலம் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்படி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளில் வாழும் இந்தியர்கள் ரூபாயில் பணபரிவர்த்தனை செய்ய என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ வங்கிக் கணக்குகளை தொடங்கி, தங்களின் சர்வதேச கைப்பேசி எண்களை இணைத்து கொள்ள வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை ஏப்ரல் 30க்குள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த நாடுகளில் கைப்பேசி எண்ணின் முதல் இலக்கங்களை வைத்து பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்படும். விரைவில் பிற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

News source: news7 Tamil