சாலை விபத்துகள் தடுக்கவும், தவிர்க்கப்படவும் வேண்டும்

– டாக்டர் புவனேஸ்வரன், இயக்குனர், பி.எஸ்.ஜி மருத்துவமனை

கடந்த டிசம்பர் மாத இறுதியில் விபத்தில் மூளை சாவடைந்த இருவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதன் மூலம் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதில் ஐந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: விபத்தில் மூளை சாவடைந்து இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற சூழலில் இருப்பவர்களின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்க முன்வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் சாலை விபத்தினால் மூளை சாவடைந்த இருவரின் உடல் உறுப்புகள் மூலமாக ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2 இருதயங்கள், 2 கல்லீரல்கள், 2 சிறுநீரகங்கள் பெறப்பட்டு, உறுப்பு தேவைப்படுவோருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யயப்பட்டு உள்ளது. இதில் 5 மாற்று அறுவை சிகிச்சை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் செய்யப்பட்டது. ஒரு சிறுநீரகம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்களின் பணி என்பது மிகவும் அளப்பரியது. மேலும், இதில் ஒருங்கிணைப்பாளர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தனர். தற்போது மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் நலமுடன் உள்ளனர்.

நம் நாட்டில் சாலை விபத்துகள் தற்போது அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களின் போது அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதற்கு தனிமனிதரின் முயற்சியினாலும், காவல் துறையின் நடவடிக்கையின் மூலமாகவும் போக்குவரத்து விபத்துகள் தடுக்கப்படவும், தவிர்க்கப்படவும் வேண்டும்.

அதேசமயம் விபத்தினால் ஒருவருக்கு மூளை சாவு ஏற்படும் போது அவரின் உடல் உறுப்புகளை, குடும்பத்தினரின் அனுமதி உடன், பிறருக்கு அளிக்கும் போது அதன் மூலம் மற்றோரு உயிர் காப்பாற்றப்படுகிறது.

தற்போது கோவை பிராந்தியத்தில் இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற அனைத்து விதமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் இடமாக பி.எஸ்.ஜி மருத்துவமனை உள்ளது. மேலும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தினால் இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும். உடல் உறுப்பு தானத்தில் நமது தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் வெங்கடகிருஷ்ணன், இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தநாராயணன், மயக்க மருந்து நிபுணர் சிவக்குமார், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் வேணு, மருத்துவர்கள் பிரசாந்த், கணேஷ், சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர்கள் வசந்த், அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.