பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு – மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி பதில் அளித்துள்ளார். அதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020ம் ஆண்டில் 3,71,503 குற்றங்கள் நடந்துள்ளது. ஆனால் 2021ல் 4,28,278 குற்றங்களாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 5,934-ஆக பதிவான நிலையில், 2020ம் ஆண்டு 6,630 ஆகவும், 2021ம் ஆண்டில் அவை மேலும் அதிகரித்து 8,501 ஆக உயர்ந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு விரைவு நீதிமன்றங்கள்,1023 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 389 போக்சோ நீதிமன்றங்கள் அமைத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் பதிலளித்தார்.