தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை அகற்றிய போலீசார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதி பசுமலை பழங்குடி கிராமத்தில், அக்கிராம பழங்குடியினர் காய்கறி உள்ளிட்ட சில பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக மாவட்ட போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையிலான போலீசார் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அதே கிராமத்தை சேர்ந்த செல்லன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிடப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து தோட்டத்தில் இருந்த 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து அகற்றினர்.

இதை அடுத்து இங்கு கஞ்சாவை பயிரிட்ட தோட்ட உரிமையாளர் செல்லன் (60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33), வேலுச்சாமி (26) ஆகிய நான்கு பழங்குடி கிராம நபர்களை கைது செய்தனர். இதை அடுத்து மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் அப்பகுதி இருக்கக்கூடிய கிராம மக்களிடையே கஞ்சா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கஞ்சா மூலம் ஏற்படும் பாதிப்பு மற்றும் சட்டரீதியாக எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் அக்கிராம மக்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.