3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் அச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

“அனலாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட் அப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்” ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய சங்கத்தினர், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து வருவதாக தெரிவித்தார்.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனலாக் சிக்னல் காலாவதி ஆகிவிட்டது, இருப்பினும் நிலுவைத்தொகை என கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

விலையில்லா செட்டாப் பாக்ஸ் என கூறி வழங்கிவிட்டு, செயல்படாத செட்டாப் பாக்ஸுகளுக்கு முழுத் தொகையையும் ஆப்பரேட்டர்களிடமிருந்து வசூல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக முதல்வர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் தங்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையின் மூலம் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்த அவர்கள் தங்களது மனுவை உடனடியாக பரிசீலனை செய்து உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.