ரேஸ்கோர்சில் நடைபயிற்சியின் இடையே அமர்ந்து படிக்க நூலகம்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோரும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்க உத்தரவிட்டார்.

போலீசாரின் மன அழுத்தத்தை போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகளை நடத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து புத்தக வாசிப்பை மேம்படுத்த, போலீசாரின் மன இறுக்கத்தை போக்க கோவை மாநகர போலீஸ் சார்பில், போலீஸ் நிலையங்களில் நூலகங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடுத்தபடியாக, ஆட்டோக்களில் நூலகம் திட்டம் தொடங்கப்பட்டது. மாநகர போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. மாநகரம் முழுவதும், 2,000 ஆட்டோக்களில் மினி நூலகம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்சில் ஸ்ட்ரீட் லைப்ரரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சியின் இடையே அமர்ந்து படிக்க வசதியாக, வாரத்தின் 7 நாள்களிலும், 24 மணி நேரமும் இந்த நூலகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று, படித்து முடித்த பின்னர் திருப்பி வைக்கலாம். பிறர் பயன்பெறும் வகையில், தங்களிடம் உள்ள புத்தகங்களை இந்த நுாலகத்தில் வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.