வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் – கோவை இடையே ரயில் சேவை

மத்திய அரசின் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி

இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் – கோவை இடையே மெமு ரயில் இயக்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் முருகன் தமிழ்நாடு வருகை தந்த பொழுது, மேட்டுப்பாளையம் கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயில் சேவையை ஞாயிறு அன்றும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று, வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் மற்றும் கோவை இடையே ரயில் சேவை இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து எல். முருகன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காகவும், தினசரி கல்லூரி பயிலும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில், மேட்டுபாளையம் – கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும். தினசரி சேவையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.