இந்திய அரசியலமைப்பை அவசியம் படிக்க வேண்டும்!

– முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் வலியுறுத்தல்

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சுபாஷினி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில்: உங்களிடம் யாராவது கேள்வி கேட்டால் தவறாக கூட அதற்கு பதில் கூறுங்கள் அல்லது தெரியாது என்றாவது கூறுங்கள். ஏன் என்றால் கேள்வி கேட்பவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்காது என்றார்.

நம் அரசியல் சட்டம் தான் உலகிலேயே பெரியது. 1949 நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. அனைவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும் என வலியுறுத்திக் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் என்றார்.

நமது அரசியலமைப்பு படியே நீதிமன்றம் செயல்படுகிறது. இதனை பாதுகாக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்பிற்க்கான பல சட்டங்கள் உள்ளது எனக்கூறி இந்திய அரசியலமைப்பு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெளிவுப்படுத்தினார்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கல்வி இல்லாத இடங்களிலேயே இருக்கிறது எனது தெரிவித்த அவர், பெண் விடுதலை பற்றி பேசும்போது ஒருவர் தன் மகளை முன்னிறுத்தி அதுகுறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

படிப்பு மற்றும் மதிப்பெண்களை பார்த்து மட்டுமே வேலை கிடைத்துவிடாது. அறிவாற்றல், திறமையை பார்த்தே வேலை கிடைக்கும். பெரியார், பாரதியார், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் ஆகியோரின் புத்தகங்களை வாசியுங்கள். ஒரு நாளைக்கு 15 நிமிடமாவது புத்தகம் படிக்க வேண்டும். அது வெறும் காகித கட்டு அல்ல. புத்தகம் என்பது எழுத்தாளனின் அனுபவம். வாசிப்பு இருப்பவர்களுக்கே வாழ்க்கையின் மீது நம்பிக்கை இருக்கும். மாதம் குறைந்தது ஒரு புத்தகமாவது படிக்க முயற்சி செய்யுங்கள். நமது அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பதிவிட்டார்.

இன்றைய தலைமுறையினர் சமூக ஊடகங்களில் எச்சரிக்கையாக இருக்கேவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், உங்களுக்கு ஏதாவது நடந்தால் பெற்றோரிடம் தயங்காமல் கூறுங்கள் என்றும், நமக்கு யாராவது தவறு செய்தால் பயப்படக் கூடாது, தைரியமாக எதிர்கொள்ளவேண்டும் என நம்பிக்கை ஊட்டினார்.

தன்னோடு சேர்ந்து பிறரையும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒரு செயலில் பொறுப்பு எடுத்துக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறவும், முன்னேறவும் முடியும் என மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினார்.