தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் விஞ்ஞானிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுக்கு மாநில அளவிலான மூன்று நாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இப்பயிற்சியை துவக்கி வைத்து காலநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் செல்வதின் வாயிலாக வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி அதனால் வருமானத்தை மும்மடங்காக பெருக்குவதில் வேளாண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதனை எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் இரவீந்திரன் பேசுகையில், இந்திய அளவில் ஓராண்டில் 1.84 லட்ச வயல்வெளி சோதனைகளும், 12.8 லட்ச முதல்நிலை செயல்விளக்கங்களும், 731 வேளாண்மை அறிவியல் நிலையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அளவில் வேளாண்மை அறிவியல் நிலையம் விவசாயிகளின் தொழில்நுட்ப திறனை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட 880 பயிர் இரகங்களையும் 1500 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களையும் மற்றும் 150 பண்ணைக் கருவிகளையும் விவசாயிகளுக்கு எடுத்து செல்வதில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். இந்தியப் பொருளாதாரம் 2047 ல் உலகின் முதல் நிலை பொருளாதாரமாக அமைய வேளாண்மையின் பங்களிப்பானது தவிர்க்க முடியாத அங்கமாக திகழும் என்பதனை உறுதியாக கூறினார்.

முன்னதாக பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் முருகன் அனைவரையும் வரவேற்று பயிற்சியின் நோக்கம் பயிற்சியின் கட்டமைப்பு மற்றும் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.