ஏழைக்கு உதவுபவரையே இறைவன் நேசிக்கிறார்!

– முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன்

மனிதநேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட்டின் சார்பில் நான்காம் ஆண்டு துவக்க விழாவும், சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது விழாவும் அண்மையில் கோவையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு டிரஸ்டின் நிறுவன தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன், தி.மு.க.மாநகர மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி, கோவை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, குறிச்சி பகுதி கழக செயலாளர் காதர், கவை 79 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தாமணி, சமூக ஆர்வலர் மூசு சித்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தன்னலம் பாராமல் சமூக பணியாற்றும் பல்வேறு சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.

இதில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் பேசியதாவது: பொதுவாக நிகழ்ச்சிகளில் அழைப்புதலில் உள்ள எல்லாரது பெயரையும் சொல்லும் பழக்கம் உண்டு. அதற்காகவே நேரம் எடுத்துக் கொள்வதாக நினைக்க தோன்றும். ஆனால் அந்த பழக்கத்தை தமிழ்நாட்டிற்க்கு பேரறிஞர் அண்ணா தான் அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னதாக நிகழ்வுகளில் பெரிய செல்வந்தர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

அண்ணா அரசியலுக்கு வந்த பின்னர்தான் சாதாரண அடித்தட்டு மக்கள் அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். எனவே, சாதாரண சாமானியர்களின் பெயரை மேடையில் குறிப்பிடும் போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பவர்களின் மத்தியிலும், சமூகத்தில் ஒரு அங்கீகாரமாகவும் உணர்வார்கள் என்ற அடிப்படையில் தான் எல்லாருடைய பெயர்களையும் சொல்லுகின்ற பழக்கம் தமிழ்நாடு அரசியலில் உருவானது.

இந்த கூட்டத்தில் ஆம்புலனஸ் சேவை செய்பவர்கள், ஆம்புலனஸ் ஓட்டுனர்கள், ரத்த தானம் செய்பவர்கள், அனாதை சடலங்களை அடக்கம் செய்பவர்கள், என சமூகம், மதம் கடந்து அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம்.

ஆனால் யாராவது ஒரு சில இளைஞர்கள் வழிதவறி தவறாக நடந்து கொள்ளுகின்ற சூழலில் வன்முறை பாதையில் ஒரு சில இளைஞர்கள் போவதால் சமூகத்தில் ஒட்டு மொத்தமான அமைதியும் சீர்குலைந்து சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் பிரச்சினைகள் உருவாகிறது. எனவே, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்பதை எச்சரிக்கையோடு கவனிக்கவேண்டும். தன் சகோதரர்கள் எங்கே போகிறார்கள் என்பதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும். இளைஞர்கள் தவறான திசைக்கு செல்லும்போது அவர்களை வழிநடத்தி காப்பற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.

மனித நேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

ஏழைகளுக்கு யார் உதவுகிறார்களோ அவர்களை தான் கடவுள் நேசிக்கிறார். உதவி என்று கேட்பவர்களுக்கு அவர்களின் சாதி, மதம் என பார்க்காமல் யார் உதவி செய்கிறார்களோ அவர்கள் தான் இந்த சமுதாயத்திற்கு தேவை. அவர்களை தான் இறைவன் நேசிப்பார். எனவே நாம் அனைவரும் இறைவனின் நேசத்திற்குரியவர்களாக இருக்க வேண்டும் என்றால் உதவி செய்பவர்களாக இருக்கவேண்டும் எனப் பேசினார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், நிழல் மையம் அறக்கட்டளையின் முருகன், வினாயகா நீடு அறக்கட்டளையின் ராஜேஸ்வரி, சுரபி இன்ஸ்டிடியூட் சுலக்க்ஷனா, குப்பேபாளையம் பள்ளி தலைமையாசிரியர் சாரதா உள்பட பலர் பங்கேற்றனர்.