நாளை முழு சந்திர கிரகணம்: நிலவு சிவப்பாக மாற என்ன காரணம்?

நாளை (நவம்பர் 8) முழு சந்திர கிரகணம் வானில் தோன்ற உள்ளது. அன்று நிலவு சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். ஆனால் இவ்வாறு நிலவு சிவப்பு நிறமாக மாறுவதற்கான காரணத்தை நாசா விளக்கியுள்ளது.

முழு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சந்திர கிரகணத்தன்று சந்திரனை அடையும் சூரிய ஒளியானது பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து செல்வதால் நிலவு சிவப்பாக மாறும். இது சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

முழு சந்திர கிரகணத்தை இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடியும். தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் இருந்து சந்திர கிரகணத்தைக் காண இயலும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும் எனவும், பின்னா் பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது என கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தைக் காண இயலும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.