ஆர்.வி. கல்லூரியில் கருத்தரங்கம்: முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கணிதம் கடினமானதல்ல!

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கணிதவியல் துறைத்தலைவர் உமாபிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் பபிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘பட்டப்படிப்பிற்கு பிறகு தொழில் தேடலுக்கான தகுதிகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், போட்டிகள் நிறைந்த உலகத்தில் நல்ல வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்றால் அதற்கான தகுதித் தேர்வுகள் எழுத மாணவர்கள் தம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். தகுதித் தேர்வுகளுக்கு தயார் செய்ய அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படை கணிதம் மட்டும் தெரிந்தால் போதுமானது.

உதாரணமாக, ஒரு கடிகாரத்தில் மூன்று முட்களை வைத்து நேரம், நிமிடம், நொடி இவற்றை சரியாக கணிக்க முடிகிறது. இது சரியான கணக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே அமைகிறது. ஒரு நூற்றாண்டில் இந்த வருடத்தில் இந்த மாதத்தில் வரும் நாள், கிழமை ஆகியவற்றை துல்லியமாக கணிக்க கணிதச் சூத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கணிதம் கடினமானதல்ல. மிக எளிமையானதாக இருக்கும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொதுத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், முதுநிலை பட்டப்படிப்புகள் பயில்வதற்கான நுழைவுத்தேர்வுகள் எழுத கணிதம் தெரிந்து கொள்வது அவசியமாகும்’ என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

நிகழ்வின் நிறைவாக கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் கல்பனா நன்றியுரை கூறினார்.