சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: கோவையில் ‘குட்டி காவலர்’ திட்டம் துவக்கம்

காணொளி வாயிலாக முதலமைச்சர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு மற்றும் உயிர் அமைப்பு இணைந்து நடத்திய மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டமான ‘குட்டி காவலர்’ திட்டத்தின் துவக்க விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தினை காணொலி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் இறையன்பு, உயிர் அறக்கட்டளையின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் உறுதிமொழியினை வாசிக்க, கோவை கொடிசியா வளாகத்தில் திரண்டு இருந்த 4,500 மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கொடிசியா வளாகத்தில் இருந்த மாணவர்கள் மட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் 4.20 லட்சம் மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை பள்ளிகளில் ஏற்றனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு குட்டி காவல் அதிகாரி போல இருந்து பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் ஆகியோரிடம் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போதும், பயணிக்கும்போதும் சீட் பெல்ட் அணியவும், வேகமான முறையில் வாகனங்களை இயக்காத வண்ணம் இருக்கவும், டிராபிக் சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி செல்லாமலும், வாகனங்களை இயக்கும் போது செல்போன் உபயோகிக்காமலும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் வலியுறுத்த வேண்டும் என அறுவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்திருக்கின்றார். ஓவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி காவலரை நியமித்து, சாலை பாதுகாப்பை பின்பற்றி நடக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

கோவை மாவட்டத்தில் 4.25 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி எடுத்து உலக சாதனை படைத்து இருக்கின்றனர். இந்த ஹாலில் நேரடியாக 4500 பேரும், இணையதளம் மூலமாக 4.20 லட்சம் பேரும் உறுதி மொழி எடுத்து உள்ளனர்.

மேலும் மாணவ, மாணவிகள் தான் மாற்றத்திற்கான முகவர்களாக மாற வேண்டும், அதனால்தான் மாணவர்களை மையப்படுத்தி இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது எனக் கூறினார்.