‘சிபாகா’வின் 11 வது ஆண்டு விழா

கட்டுமானத்துடன் சமூகத்தையும் கட்டமைக்கும் சிபாகா!

கோயமுத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) தனது 10 வது ஆண்டை பூர்த்தி செய்து 11 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த ஆண்டிற்கான ‘சிபாகா தினம்’ கோவை அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 20 நண்பர்களால் கோவை பகுதியில் உள்ள கட்டுமானத் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதன்மையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று பல நூறு உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது.

கட்டுமான தொழில் சார்ந்து மட்டுமல்லாமல் பல சமூகம் சார்ந்த செயல்பாடுகளையும் சிபாகா முன்னின்று செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது ஆண்டு விழா நிகழ்வில் சமூக பணி செய்தவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் கண்டு கவுரவிக்கும் சிபாகா, இந்த ஆண்டும் அப்படிபட்ட இருவரை தேடி கண்டுபிடித்து ‘சிபாகா மேன்மை விருது’ வழங்கி உள்ளது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், பல்லுயிர் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து பாதுகாத்து வரும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் அசோகன் அவர்களுக்கு வழங்கினார்.

பின்னர், 2021 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற ஜெர்லின் அனிகாவுக்கு வழங்கினார். தொடர்ந்து அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை கீர்த்தனா என்பவருக்கு உதவிதொகை வழங்கப்பட்டது.

நிகழ்வின் தொடர்ச்சியாக சிபாகா சார்பில் ‘இந்திய சுதந்திரத்தில் தமிழகம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இதனை சிபாகா தலைவர் சுவாமிநாதன் வெளியிட, சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார். பின்னர் சிபாகாவின் மாதாந்திர காலண்டரை சிறப்பு விருந்தினர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் அருள் பிரகாஷ் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். சிபாகா செயலாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பலர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

சமுதாய சிந்தனை வேண்டும்!

கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில்: கோயமுத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சாதனை விருது பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து பாராட்டிப் பேசினார். தன் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான பல பணிகளையும் செய்து வருகின்றனர்.

மேலும் அவர் 75 ஆண்டு சுதந்திர தினம் குறித்து தனது உரையில் குறிப்பிடுகையில், நமக்கு கிடைத்த சுதந்திரம் எளிதாக கிடைத்து விடவில்லை எனக் கூறிய அவர், மகாத்மா காந்தியடிகள் சுதந்திரத்துக்கான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதிலும் உலகம் அதுவரையிலும் கண்டிராத அகிம்சா முறையை பின்பற்றி அதனை பெற்றுத் தந்துள்ளார்கள். ஆனால் அன்று இருந்த தியாக உணர்வு இன்றைய மக்களிடம் குறைந்து விட்டது என தனது வருத்தத்தையும் பதிவிட்டார். மகாத்மா காந்தியின் வாழ்க்கையையும் அவரது தியாகத்தையும் மதிப்பையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

முந்தைய காலத்தில் மக்கள் எளிமையாக வாழ்ந்தனர், ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆடம்பரம் மக்களிடையே அதிகரித்து உள்ளது. தேவையானவற்றிற்க்கு அதிகமான ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். “எளிமையான வாழ்வு, உயர்வான சிந்தனை மற்றும் ஒன்றை சாதித்தால் மட்டும் போதாது அதை நேர்மையான வழியில் சாதிக்க வேண்டும்” என காந்தி கூறிய இரண்டு கொள்கைகளை பின்பற்றி வாழ்க்கையை வாழ்ந்தாலே போதுமானது.

சுதந்திரம் அடைந்த இந்த 75 ஆண்டுகளில் அதிகம் சாதித்துள்ளோம். நமது நாட்டின் சாதனைகள் மகத்தானது. உலகத்தில் மிகப்பெரிய 5 வது பொருளாதாரத்தை அடைந்து உயர்ந்து நிற்கிறோம். இந்த நாட்டில் உள்ள வளம் உலகில் எங்கும் இல்லை. இயற்கை வளம் இந்தியாவில் ஏராளமாக உள்ளது. இந்திய நாட்டிற்கு நிகரான கலாச்சாரம் வேறு எங்கும் இல்லை என்றார்.

நமக்கான வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்காமல் சமுதாயம் குறித்த சிந்தனையும் ஒருவருக்கு இருக்க வேண்டும். தேசத்தை முன்வைத்து நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி உங்களுக்குள் எழவேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் கல்வி மூலம் தன்னை உயர்த்திக் கொண்டு, அதன் வழியாக சமூகத்தை உயர்த்த வேண்டும். ஒரு மாணவனின் திறனை கண்டறிந்து அதனை வெளிக்கொணருவது தான் கல்வி. அதைத்தான் அவர்களுக்கு போதிக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் வாழும் சமுதாயம் குறித்து சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான பொறுப்புகள் அதிகம் உள்ளது, அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டோம், ஆனாலும் இன்றும் நம்முடைய நாட்டிலே பல சொல்லி முடியாத பிரச்சனைகள் உள்ளன. அதேசமயம் இன்று இருப்பதை விட அன்று ஏழ்மையும், அறியாமையும் அதிகம் இருந்தது, இன்றைய காலத்தில் அப்படி இல்லை, அனைத்தும் வளர்ச்சி அடைந்துவிட்டது.

சிபாகா பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கான எதிர்காலம் குறித்த பல கருத்தரங்குகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனுடன் சேர்ந்து அவர்களுக்கான ‘யூத் கேம்ப்’ நடத்தி நற்சிந்தனைகள் கொண்டவர்களை அழைத்து அவர்களை வழிநடத்தவேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் முன்வைத்தார்.

பிறரின் துன்பத்தில் துணை நில்லுங்கள்!

பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் அருள் பிரகாஷ் சிறப்பு சொற்பொழிவாற்றி கூறியதாவது: அனைத்து தொழிலுக்கும் ஒரு நெறிமுறைகள் இருக்கும். சிபாகா தொழில் துறையினர் தங்கள் அமைப்பு நன்றாக இருந்தால் மட்டும் போதும் என்று எண்ணாமல், இந்த சமூகமும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து பல செயல்பாடுகளை செய்து வருவது பாராட்டுக்குரியது. நாம் ஏன் பிறருக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிராமல், வாழும் சமூகத்திற்கு ஏதாவது நற்காரியங்கள் செய்யவேண்டும் என்ற சிந்தனை கொண்டுள்ளதால் தான் சிபாகா வெற்றி பெற்றுள்ளது எனக் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், வருங்கால தலைமுறையினருக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியாவின் வரலாற்றை இளம் தலைமுறையினரிடம் சரியாக சொல்ல வேண்டும். நம் முன்னோர்கள் சமூக அக்கறையுடன் வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று அது குறைந்துள்ளது, குழந்தைகளிடம் இப்போது இருந்தே அந்த சிந்தனையை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

ஒரு பிரிவினரை சேர்ந்தது மட்டுமே சமுதாயம் கிடையாது. அனைத்து பிரிவினரும் உள்ளடக்கி அனைத்து துறைகளும் சேர்ந்துதான் சமூகம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குழுவாக சேர்ந்து வாழவேண்டும்.

தற்போது மிகப் பரபரப்பான உலகில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். பிறரைப் பார்த்து வாழாமல், நமக்கான வாழ்க்கையை வாழ குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்வின் அனைத்து சூழலிலும் நல்ல மனநிலையில் இருப்பது முக்கியம். சமூகத்துடன் இணைந்து வாழ்வதுதான் சரியான வாழ்க்கை. அடுத்தவரைப் பற்றி கவலைப்படாத வாழ்க்கை வாழ்வு அல்ல. அடுத்தவர்கள் படும் துன்பத்தை தன் துன்பமாக நினைப்பவர்களுக்கு தான் அறிவு உள்ளது என்ற தன் கருத்தையும் முன்வைத்தார்.

சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும், தன்னை நெறிப்படுத்தி சரிபடுத்திக் கொள்ள வேண்டும். எல்லா ஆற்றலும் நம்மிடம் உள்ளது. சமுதாயத்துடன் சேர்ந்து வளரவேண்டும். தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் ன நினைக்காமல் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கும் எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சிபாகா செயல்பட்டு வருகிறது. இந்த சமூக அக்கறையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என அறிவுறுத்தினார்.