10 முக்கிய பிரச்சினைகளை பட்டியலிட்டு கூட்டாக மனு அளித்த கோவை அதிமுக எம்.எல்.ஏக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களது தொகுதியில் நீண்டகாலமாக உள்ள முக்கியமான 10 பிரச்சினைகள் அல்லது குறைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என தெரிவித்திருந்தார். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும், முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

9 பேரும் அவரவர் தொகுதியில் உள்ள முக்கியமான 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு அளித்து, மாவட்ட ஆட்சியரிடன் அப்பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி: முந்தைய ஆட்சியில் சாலைகள் அனைத்தும் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும். தற்போது சாலைகள் அனைத்தும் மோசமாக உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலாவதாக அளித்துள்ளோம்.

மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக, பைப் லைன் தோண்டிய சாலைகளால், மழை வருவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அரசு சாலைகளை முதலில் சரிசெய்ய வேண்டும்.

ஜெயலலிதா காலத்தில் ஒப்பந்தம் கோரிய 500 சாலைகளை இந்த அரசாங்கம் ரத்து செய்ததாகவும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாலங்கள் முடிக்கப்பட வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தையும் கோரிக்கையாக அளித்துள்ளோம். தற்போது குடிநீர் விநியோகம் செய்ய 10, 15 நாட்கள் ஆகிறது. அணைகளில் தண்ணீர் இருந்தும் அதனை சரியாக விநியோகிப்பதில்லை.

முந்தைய ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த திட்டங்களை எல்லாம் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்தையும் செய்ய வேண்டுமென கூறினார்.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50% நிறைவடைந்த பணிகளை ஏதோ உள் நோக்கத்தோடு நிறுத்தி விட்டனர். அதனை தொடர்ந்து செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளதாகவும், அதனால் சிட்டிக்குள் போக்குவரத்து நெரிசல் முழுமையாக குறையும் என தெரிவித்தார்.