பிராங்க் வீடியோவால் மன உளைச்சல்: கோவையில் யூ டியூப் சேனல் மீது வழக்கு

கோவை நகரில் பல்வேறு இடங்களில் குறும்புதனமான பிராங்க் வீடியோ எடுக்கப்படுவதாக புகார் பெறப்பட்டது. ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் இதுபோன்ற வீடியோக்கள் எடுப்பதாக தெரிகிறது. பெண்கள், முதியவர்களை குறி வைத்து அவர்களுக்கு தெரியாமல் வீடியோ கேமராக்கள், செல்போன்கள் மூலமாக இதுபோன்ற வீடியோக்கள் எடுக்கப்படுகிறது.

இவற்றை யூ டியூப்களில் வெளியிடுவதாக தெரிகிறது. இந்த வீடியோக்களால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், சம்பந்தப்பட்டவர்களின் கண்ணியத்திற்கு குறை ஏற்படும் வகையில் மன ரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் சிலர் வீடியோக்கள் எடுப்பதாகவும் போலீசாருக்கு புகார் குவிந்து வருகிறது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரித்தனர். கோவை 360 டிகிரி யூ டியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் கோவையில் பிராங்க் வீடியோ எடுத்துள்ளது தெரியவந்தது. இவர்கள் பெண்களை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த யூ டியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில், பூங்கா, படகு துறை, ஸ்மார்ட் சிட்டி பொழுது போக்கு இடம், ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் உள்ளிட்ட பகுதிகளில் பிராங்க் வீடியோ பதிவு செய்கிறார்களா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.