சீரற்ற இதயத் துடிப்பால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் – கே.எம்.சி.ஹெச் கருத்தரங்கில் தகவல்

சேலத்தில் கே.எம்.சி.ஹெச் சார்பாக இதய துடிப்பு நோய் கருத்தரங்கு

சேலத்தில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக இதய துடிப்பு நோய் கருத்தரங்கு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இதய நோய்கள் குறித்தும் அவற்றுக்குண்டான அதிநவீன சிகிச்சை வசதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் மதுரையை தொடர்ந்து தற்போது சேலத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இருதய சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தீவிர சிகிச்சை மருத்துவர்கள், பொதுமருத்துவர்கள் உள்ளிட்ட 200 க்கும் அதிகமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதயத் துடிப்பு சீராக இருக்கவேண்டியது அவசியம். இதயம் வழக்கத்தை விட வேகமாக அல்லது மெதுவாக துடித்தால் இதயத் துடிப்பு சீரற்று இருக்கிறது என்று பொருள். அதற்கு சீரற்ற இதய துடிப்பு (Arrhythmias) என்று பெயர். இதயத்துடிப்பு மின் தூண்டுதலால் நடைபெறுகிறது. இந்த மின் தூண்டுதல் சரிவர நிகழாதபோது இதயத்துடிப்பு பாதிக்கிறது.

இந்த சீரற்ற இதயத் துடிப்பு நோய்க்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் தலைசுற்றல், மயக்கம், மூச்சுவிட சிரமம் ஏற்படும், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். இதயத்தின் மேற்பகுதியை இது பாதிப்பதால் இது இதய மேலறை நடுக்க நோய் (Atrial Fibrillation) என்று மருத்துவத் துறையில் அழைக்கப்படுகிறது. இதனால் உடலின் மற்ற பகுதிகளுக்கு சீரான இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

உலகம் முழுவதும் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் இதயம் செயலிழக்கவும் பக்கவாதம் ஏற்படவும் உயிருக்கே ஆபத்தாய் முடியவும் வாய்ப்புள்ளது. இன்னமும் சொல்லப்போனால் இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு ஐந்துமடங்கு அதிகரிக்கிறது.

இதற்கு கிரையோ அப்லேஷன் (Cryo Ablation) என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை தற்போது பயன்படுத்தப்படுகிறது. உலகின் 80 க்கும் அதிகமான நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளால் இந்தப் புதுமையான சிகிச்சை முறை மூலம் பயன்பெற்றுள்ளனர்.

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இத்தகைய இதய நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன க்ரையோஅப்லேஷன் கருவி வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதயத் துடிப்பு நோய்களுக்கு என்று பிரத்யேகமாக தனி சிகிச்சை மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. க்ரையோஅப்லேஷன் என்பது அதிநவீன மற்றும் சிறந்த பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் என்ற மருத்துவ முறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு இக்கருத்தரங்கு ஒரு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று கருத்தரங்கு ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் தெரிவித்தார்.