தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் இயற்றுவது குறித்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், புதிய முதலீடுகளுக்கான அனுமதி உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்தும், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், வெள்ளத்தடுப்பு சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்படுகிறது.