இளைஞர்களிடம் காங்கிரசை கொண்டு சேர்ப்பதே நோக்கம்!

– ஹரிஹரசுதன், தேசிய துணை ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்

கோவையை சேர்ந்த ஹரிஹரசுதன், அகில இந்திய தேசிய இளைஞர் காங்கிரசின் தேசிய துணை ஒருங்கிணைப்பாளராகவும், புதுச்சேரிக்கு பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் ஊடக துறையின் அகில இந்திய தலைவர் ராகுல் ராவ் இவரை நியமனம் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக இவர் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சேவாதளம், INTUC தொழிற்சங்கம், மனித உரிமை துறை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக பதவி வகித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பதவிகள் இருந்தால், அதனை குறைத்து ஒரு பதவி வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என ஹரிஹரசுதன் கூறினார்.

மேலும், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 148 நாட்களில் 3500 கிலோ மீட்டர் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்ல உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாச்சல் மற்றும் அடுத்த ஆண்டில் நடைபெறும் கர்நாடக மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், எங்கள் கட்சியின் வேர்களை இங்கு வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சி புரிய வேண்டும். மேலும், இந்தியளவில் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே என்றார்.

தேசிய துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சிறப்பாக எனது பொறுப்புகளை செய்ய வேண்டும் என எண்ணுகிறேன். இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு செயல்படுவேன். ஏன் எனில் அவர்கள் நினைத்தால் மட்டுமே நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதற்காக சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் எங்கள் கட்சியை கொண்டு சேர்க்கும் வகையில் குழு ஒன்று அமைக்க உள்ளோம்.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளதாகவும், ஹரிஹரசுதன் தெரிவித்தார்.