கொங்குச்சீமை செங்காற்று – 4

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

இந்த ஒரே வீட்டில் உள்ள இன்னொரு தாழ்வாரத்தில் வசித்து வந்த போதிலும், தன் குடும்பத்துக்கென்று தனியாக கூப்பன் வேண்டுமென விண்ணப்பித்து அதை வாங்கி வைத்திருந்தாள் நாகரத்தினம்!

அவளுடைய கணவன் நமச்சிவாயத்துக்கு இது பிடிக்கவில்லை என்ற போதிலும், “அப்பொதா கூடுதலா ரேஷன் சாமானுக கெடைக்கும். அவிகவிக என்ன பண்றாங்கன்னு நெனச்சீங்க? ஊடுக ஒண்ணா இருந்தாலும் தனித்தனியா வாங்கிக்கிறாங்க…!” என அவன் சொன்ன நிலவரத்தைப் புரிந்துகொண்டு சம்மதிப்பவனாக இருந்தான்.

தன்னோடு சேர்ந்து நான்கு ஆட்களென்று  கணக்கிட்டு வாங்கி வைத்திருந்த ரேஷன் கார்டையும் அவ்வப்போது இந்த மருமகளிடமே எடுத்துக் கொடுத்து, வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளச் சொல்லி விடுபவளாக இருந்தாள் அம்மா!

காடுகரைக்குப் போய், விறகு சேகரித்துக்கொண்டு வரும் சிரமங்களை முன்னிட்டு ஸ்டவ்விலேயே சமையல் செய்வதை நாகரத்தினம் வழக்கப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“…எதுனாலும் எச்சுமிச்சா ஆக்கோணும்னா இங்கெ வெறகுக் கடைல ரெண்டொரு மனுவு வாங்கிக்கிறதுதானுங்க” என்பான்.

விதைச் சோளத்தைக் கைகளில் அள்ளி இறைத்தது போல் ஆகாயத்தில் வெள்ளி மீன்கள் நிறைந்து கிடந்தன. இருளின் அமைதியைக் குலைக்கிற மாதிரி குளத்துப்பாளையத்துக்குத் தென் புறமிருந்த மெயின்ரோட்டில் வாகனங்களின் இரைச்சல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

முன்பெல்லாம் தெற்க்குக்காடுகளில் இருந்து இந்த நேரத்திற்கு ஊரை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் கட்டை வண்டிகளின் சீரான ஒலி மட்டும், ஒரு நாள் சுருதியோடு இட்டேறிகளில் கேட்கும். இப்போதெல்லாம் அந்த வண்டிகள் அருகிப் போய்விட்டன. அவற்றின் அவசியமுங்கூடக் குறைந்து விட்டதோ என்பது போல் நிலைமை மாற்றமடைந்து கொண்டு வந்தது.

மாசய்யன் தன்னுடைய மலையடிவாரக் காட்டுக்கு வண்டியில் போய்வரும் சமயங்களில் அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் குனியமுத்தூர் வழியாகப் பாலக்காடு ரோட்டில் செல்லும் வாகனங்களின் லைட் வெளிச்சம் மதுக்கரை வரையிலும் பொட்டுப் பொட்டாகத் தோன்றி மறைவது தெரியும். காளைகளின் கண்களில் வெளிச்சத்தைப் பாய்ச்சினால் தெரியும் ஜொலிப்பு போன்ற தோற்றத்தை அது உண்டாக்கும்.!

அறுவடை  சமயங்களில்  வேளாண்மைக் காடுகளிலேயே குடியானவர் கள் தங்கிக் கொள்வது அவ்வப்போது நடப்பில் இருந்தது. எந்தக் குளிரையும் தாங்கிக்கொள்ளும் தெம்பானது உடம்பில் இருந்த காலம் அது! அந்த ஞாபகங்களெல்லாம் இவரால் மறக்க முடியாதவைகளாய் நெஞ்சுக்குள்ளேயே இருக்கத்தான் செய்கின்றன.

தெற்கே பச்சபாளித் தோட்டத்தில் இவருக்குச் சொந்தங்கள் உண்டு. மாமன் முறையாகிய வீரண்ணகவுடர் இவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும் போது வந்து பார்த்துப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார்.

இன்றைக்குங்கூட தெற்கத்தி ஓரம்பரையாக அவர்தான் வந்திருந்தார். பாப்பம்பட்டி போய் வந்த விசயம் நல்லபடியாக அமைந்ததா என்பதை விசாரிக்கத்தான் அவரும் இங்கு வந்திருக்கிறார் என் பதை மாசய்யன் விளங்கிக்கொண்டார்.

பெரியவர் ஒருத் தரை வைத்துக் கொண்டு, தன் இல்லத்தின ருக்கு இதைச் சொல்வதில் இவருக்குச் சற்றுக் கூடுதலாக வே விருப்பம் ஏற்பட்டது.

“நாளமித்த நாளு நம்ம தோட்டத்துக்கு வர்யாம்னு தானுங்க நானும் இருந்தனுங்க மாமா.”

“ச்… செரித்தான்.நானும் நேத்தைக்கே நீ வந்திருப்பே அப்பிடின்னு ஓசுநெப்பண்ணி னேன்! ச்… செரி போயி ஒரு எட்டுப் பாத்துப் போட்டு வந்தாப்போவுதுன்னு வந்தம் பாத்துக்க…”

“….அதுக்கென்னுங்க! வந்ததுல சந்தோசந்தா…”

“….ச் செரி சொல்லு! நீயி போயிட்டு வந்ததைப்பத்தி”

“ம்…ம்…! அங்கெயிங்கேன்னு நாலஞ்சு எடங்கள்ல சுத்திப்பாத்த அளவுல இந்த வாட்டிதா மனசுக்குத் திருப்தி எற்படறாப்ல ஒரு பொண் ஊடு அமைஞ்சிது..!

அவர் சொல்லிக்கொண்டிருப்பதை வீட்டிலுள்ளவர்கள் எல்லோருமே அக்கறையோடு கேட்டவாறிருப்பது புரிந்தது. நமச்சிவாயமும், சுப்பையனும் அங்கேதானி ருந்தனர். செல்வராசுதான் வெளியில் எங்கோ போயிருந்தான். அவன் இல்லாதது பெரிய குறையாகத் தெரியவில்லை.

“…நம்ம சுப்பையனோட நல்ல கொணத்துக்கும், மனசுக்கும் தக்குன பொண்ணுதானப்பா எப்ப இருந்தாலும் வந்துசேரும்கிறே! போன மூணாம் வருசமே முடிஞ்சிருக்க வேண்டீது. அது ஏனோ மாறிப் போச்சு. அப்பிடி அது நின்னதுங்கூட நல்லதுக்கினு நெனச்சுக்கலாமப்பா…”

தன்னுடைய அபிப்ராயத்தை இப்படிச் சொல்லிவிட்டு “என்ன அம்மிணி நாஞ்சொல்றது வாஸ்தவந்தானே…” என்றார். வீரண்ண கவுடர் நாகரத்தினத்தைப் பார்த்து.

தன்னை இப்படிக் கேட்பாரென்று அவளும் எதிர்பார்க்கத்தான் இல்லை. எனினும் சுதாகரித்துக்கொண்டு “செரித்தானுங்க பின்னே” என்றாள்.

மனதுக்குள் “இந்த அய்யன் எதுக் கொசரம் நம்மெப்பார்த்து அபிப்ராயம் கேக்குதாமா? எப்பவும் வெனையம் புடுச்ச ஆளுங்கறது செரியாவில்ல இருக்குது” என்கிற சலனமும் எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“….நா பாத்து சொல்ற எடங்களெல்லாம் இவிகளுக்குப் புடிக்குமுங்களா…? எங்காச்சும் கொண்டு போயி பள்ளம்பாட்டுல எறக்கிப் போடுவேனோன்னு என்னெ இவிக நம்புவாங்க கண்டீங்க…? அதுக்குத்தா அவிகவிகளே சுத்தியலஞ்சு எப்பிடியாப்பட்ட கொனவதியைத் தருவிச்சுட்டு வருவாங்களோ அப்பிடியே வருட்டும்னுதா நானும் எம்பாட்டுக்கு பொட்டாட்டமா இருந்துட்டேன் போங்க…” என்று அவசரப்பட்டு எரிச்சசளிக் கொட்டித் தொலைத்துவிடுவோமென்று ஜாக்ரதையாக அடக்கிக் கொண்டாள்.

“ச்…செரி அப்போ இந்த மாசத்துக் குள்ளாறவே ஒரு முகூர்த்த நாளாப்பாத்து நீங்க சுப்பையனையும் கூட்டிட்டுப் போயி பொன்னே எல்லோருமே பார்த்துட்டு வந்துருங்களே..அம்மிணி..”

வீரண்ணக்கவுடர் இப்படிச்சொன்னது மாசய்யனுக்கு உடன்பாடைப் போயிற்று! தானே இதைச் சொல்வதை விட தன்னைக் காட்டிலும் மூத்தவரான…அதுவும் இந்த வீட்டோட சொந்த முறையுடைய பெரியவர் ஒருத்தரின் கூற்றாக இது கை கூடி வந்தது இயல்பான நிம்மதியை உண்டாக்குவதாகவும் இருந்தது.

“மொதல்ல புள்ளெயப் பாருங்க! எல்லாத்துக்குமே மனசுக்குப் புடிக்கும்.  புள்ளெய தன்ர மனசுக்குப் புடிச்சுப் போச்சுன்னு சுப்பையனும் ஒரு வார்த்தை சொல்லீட்டன்னா அப்பறம் மித்ததுகலெப் பத்தி நீங்க எல்லோரும் சேர்த்து பேசி முடிச்சுட்டு வந்திருங்களே…! நாஉங்களுக்கு எல்லாத்தையும் ஒவ்வொண்ணா சொல்லியா குடுக்கோணும்?” என்றார்.

“ அதுக்கில்லைங்க…” என நாகரத்தினம் என்னவோ சொல்ல முற்பட்டாள்.

“நீ சித்தெ சும்மா இரு” கையமர்த்தினான் நமச்சிவாயம்.

தான் சொல்ல வந்ததை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்ட படபடப்பு அவனது முகமெங்கும் படர்ந்ததை அவனும் கவனிக்கவே செய்தான்.                               (தொடரும்)