கொங்குச்சீமை செங்காற்று – 5

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

தன்னுடைய தம்பிக்கு பெண் கொடுக்க வருபவர்கள் இந்த வீட்டின் மூத்த மருமகளான இவளைப் பார்த்து ‘முன் கோபக்காரி’ என்கிற பயத்தில் தயக்கத்தைக் காட்டுகிறார்கள் என்பது நமச்சிவாயம் அறிந்ததுதான்…!

அது மட்டுமல்லாமல் இன்னும் சில காரணங்களும் கூட இருந்தன. “எங்க அப்பனூட்டுல போட்டாப்ல மித்தவிக நகை நட்டுனு ஒரே முட்டா தூக்கிப் போட்டு ருவாங்களா? அந்தக் கெனாவுக இனி கண்டுற முடியுமா….?”

“இன்ஜினியர் படிப்புப் படிச்ச மாப்பிள்ளைன்னும், பேங்கு வேலக்காரங் கன்னும் எத்தன எடத்துல வந்து என்னைப் பொண்ணு கேட்டாங்களாக்கும்! அதையெல்லாம் வுட்டுப் போட்டு எதோ பழய சொந்தம் மறஞ்சு போகக் கூடாதுங் கிறதுக்காக இங்கெ என்னெக் கட்டிக் குடுத்தாங்க..”

என்று வீண் பெருமைகளைச் சொல்லிக்கொண்டு போவதோடு மட்டு மல்லாமல் வீணான வருத்தங்களையும் உண்டு பண்ணி வைத்துவிடும் என்பதாக நாகரத்தினத்தின் குதர்க்கமான பேச்சுக்கள் அவசரகதியில் ஆகிவிட்டிருந்தன.

சில தருணங்களில் பொறுபட மாட்டாமல் “உங்க அப்பனூட்டு  சீரு செனத்திக்கெல்லாம் லாரி லாரியா வந்து எறங்குன சங்கதியே நாங்களும் பாத்துட்டுதானே அம்மிணி இருக்கறோம்! அதெய விடாமச் சொல்லிக் காட்டுலேன்னா எங்களுக்கு மறந்தா போயிரும்கிறே…” என நமச்சிவாயத்தின் பெரியப்பா மகள் தட்டிக் கேட்டு அதை ஒட்டி இவளும் விடாப்பிடியாகப் பேச பெரிய சண்டை சச்சரவில் கொண்டுபோய் நிறுத்திவிட்டதும் உண்டு! இப்போது அந்த குடும்பத்தாரோடு பேச்சு வார்த்தை கூட இல்லை! இந்த நினைவுகளின் பின்னணியில் இருந்து மீண்டு நமச்சிவாயம் பஞ்சாங்கத்தை எடுத்து நல்லநாள் பார்த்தான்.

“….என்னப்பா அனுசுக்கு நல்ல நாளுக எதுனாலும் தோதா இருக்குதுகளா?”

“…வர்ற வெள்ளிக்கெழமையே கூட நல்லநாளுத்தானுங்க! அதைய வுட்டாக்க திங்கக்கெழமையும், பொதங்கெழமையும் தேவுலாமுங்க…”

“பரவால்லே! இந்த மூணு நாளுகள்ல  எதுனாலும் ஒண்ணே முடிவு பண்ணி அந்த நாள்ல நீங்க ஒரு பத்துப்பேரு போயிட்டு வந்துருங்களே….”

என வீரண்ணகவுடர் சொன்ன யோசனையை ஒரு மனதாக அவர்கள் சம்மதித்தனர்.

வீட்டில் மற்றவர்களெல்லாம் தூங்கியும் கூட முருகம்மாளுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தவாறிருந்தாள்! மனசுக்குள்  சுப்பையனின் ‘கண்ணால காரியம்’ இந்த வாட்டியாச்சும் கைகூடி வந்துச்சுன்னா எத்தனையோ மேலுது! அந்த அய்யாமலையானைத்தான் நம்பியிருக்கறோம்! இந்தக் குடும்பத்துக்கு அவந்தா தொணையாயிருக்கோணும்..! என்று எண்ணியவாறு எழுந்து வாசலுக்கு மெதுவாக நடந்து வந்தாள்.

அய்யாமலை இருக்கும் தென்மேற்குத்திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவாறு சற்று நேரம் நின்று கொண்டிருந்தாள். அவளது பாட்டன் காலத்திலிருந்து எந்தவொரு நல்ல காரியத்துக்கும் அங்குபோய் ‘பூ’ வைத்துக் கேட்காமல் அதைச் செய்ய மாட்டார்கள்.

“…அந்தச் சாமி மட்டும் நல்ல மொறையில வெள்ளைப் பூ குடுத்துச்சினா அப்புறம் அதுக்கு மேலானது எதுவுமே இல்லேன்னு நெகாரிச்சுச் செய்யலாம் பாத்துக் கோங்க”

முன்னோர்கள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் இந்த நேரத்திற்கும் நினைவுக்கு வந்து கண்களிலே நீரை அரும்பச்செய்தன. தெளிவு கிடைத்த நிம்மதியோடு படுக்கைக்கு வந்தாள் அவள்.!

“வர்ற திங்கக் கெழமை அந்த அய்யாமலையான் சன்னதிக்குப் போய் பூ வெச்சுக் கேட்டுட்டு வந்தாகோணும்..” என்கிற எண்ணம் அவளுக்கு அழுத்தமாக உண்டாகி விட்டிருந்தது.

ஊரை அடுத்து இருக்கும் நிலங்களெல்லாம் விற்பனையாகிக் கொண்டிருந்தன. குடியிருப்புகளாக அந்தப் பகுதிகளெல்லாம் மாற்றம் அடையப் போவதற்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.

கோவை நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்டு நல்ல காற்றோட்டமும், குளிர்ச்சியும் கொண்டு வசிப்பிடங்களுக்குச் சௌகரியமானதாக இந்தப் புற நகர பகுதியின் கிராமங்கள் தென்பட்டன.

அவரசரப்பட்டு விற்பனை செய்து விடாமல், நிலங்களை வைத்திருந்தால் பின்னாளில் கூடுதலான விலை கிடைக்கு மென்கிற அனுமானத்தில் குடியானவர்கள் இருந்தனர். எனினும், அவர்களை விடாப் பிடியாக அணுகி சம்மதிக்க வைப்பதில் புரோக்கர்கள் வெகு முனைப்பாயிருந்தனர்.

“நீங்க, பின்ன பொறகு எச்சுவெலை வரும்னு சொல்லி வெச்சிருக்கிறதுல தப்பு இல்லீங்க! ஆனா ஸ்பெசல் போலீஸ் படைகளுக்குனு இங்கே ஒரு பெரிய மையம் ஆகப்போகுது. அப்போ இந்த கவுர்மெண்ட் உங்க நெல புலங்களையெல்லாம் கையகப்படுத்தியிட்டு ஏதோ ஒரு கணக்குல அரை வெலை போட்டுக் குடுக்கறதுக்கு முன்வரும்! அப்போ நீங்க மறுக்க முடியாது.”

எனத் திட்ட வட்டமாகக் கருத்துக் கூறினர்.

இது மேட்டாங் காட்டு விவசாயிகளுக்குப் பெருத்த பயத்தையும், அலைக்கழிப்பையும் உண்டு பண்ணுவதாக ஆயின.

“திடுதிப்னு வந்து நோட்டீசைக் குடுத்துட்டு ஒரு வெலையைப் போட்டுக் குடுக்கிறோம்னு கவர்மெண்ட் சொல்லுச்சின்னா நாம என்னங்க பண்ண முடியும்..?”

“அதுக்கு இவிக சொல்றாப்ல நாமளாகவே வித்தாலாச்சும் கெடைக்கிற ரெண்டு காசெ கண்ணுல பாக்குலாம்..”

பெரும்பாலானவர்களுக்கு மனதில் சலனங்கள் உண்டாகி சஞ்சலங்களைக் கொடுக்கவும் துவங்கி விட்டன.

நமச்சிவாயத்துக்கு விவசாயத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை.

“காட்டெ நம்பி அதுக்குள்ளாறவே சுத்தியிட்டு இருக்கிறவன் எப்பவுமே மேலுக்கு வர முடியாது” என்பான்.

“அந்தக் காடுகரை என்னைக்கும் நம்பளை ஏமாத்தாது! நாம அதையெ நம்பி நேர்மையாகப் பாடுபட்டோம்னா அந்த நன்றிய அது திருப்பிக் குடுக்கவே செய்யுமுங்க” என்று பற்றுதலோடு பதில் தருவான் சுப்பையன்.

இந்த  மகன்களின் கருத்துக்களை மனசுக்குள் எண்ணிப்பார்த்து பெருமூச்செறிவார் மாசய்யன். படிப்புக்குப் போக தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத் தொழிலுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டுமென கடைசி மகன் செல்வராசு எண்ணிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் சுமாராகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.

“.. மதுக்கரை சிமிட்டிக் கம்பெனி வேலைக்குப் போகுற நம்ம ஆளுக, அவிகளோட காடுகளே விக்கிறதுல நட்டமொண்ணுமே கெடையாது”

“எப்பிடிச் சொல்றீங்க..?”

“.. அவிகளுக்கு மாசம் பொறந்தா மொதல் தேதிக்கே சொளையா சம்பளம் வந்துருது.

அப்பறம் தீபாவளி, பொங்கல்னு நோம்பிச் சமயங்கள்ல போனஸ் அது இதுன்னு கெடைக்குது! வேலையவுட்டு நிக்கிற போதும் “ஓய்வீட்டுத் தொகை”யினு சொல்லி பெரிய தொகையாவே கெடைக்குது”.

“அது அவிகளுக்குப் போதும்கிறீங்களாக்கும்..”

“பின்னே என்னப்பா பின்னே! அந்தப் பணம் தாராளமாகப் போதும். பேங்குல போட்டுட்டு வட்டியை வாங்கிச் செலவு பண்ணுனாலே போதும்! ஆயுசு முச்சூடும் கஞ்சிக்கும் கொறை எதுவும் இருக்காது! எந்தக் கட்டத்திலேயும் காசிக்குத்துளி கூடத் தட்டுப்பாடு வராது. நெகாரிச்சு எது ஒண்ணையும் பண்ணுலாம்! வீடுகளும், எடங்களும் வாங்கிப் போட்டு வெச்சுக்கலாம்! இல்லீனா ஏதோ ஒரு தொழிலின் பேர்ல பணத்தை நெக்குன்னு போடுலாம்! கண்ணாலாங்காச்சியினு எந்தச் சொணக்கமும் இல்லாம நல்ல மொறையில செய்யிலாம்!”

“ச்செரித்தானுங்க! அப்பிடி இருக்கிறவிக அப்பறமிந்த பொக்கனாத்திக்காடுகளே ஒரு பெருசாவா நெனைக்கப் போறாங்க..?

“வந்த வெலைக்கு, கெடச்சதே லாபம் போன்னு தட்டியுட்டுப் போட்டுப் போகத்தான் செய்வாங்க..”

கோயில் மேடையில் அரசமரத்தின் நிழலில் ஊர்ப் பெரியவர்கள் சாவகாசமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர்! கிளைகளின் சிமிர்களில் வெளிச்சம்பட்டு கீழே சில்லறை நாணயங்களைப் போல் சிந்தியபடி இருந்தது.

(தொடரும்)