கொங்குச்சீமை செங்காற்று – 3

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

சுப்பையனின் அண்ணன் மனைவி நாகரத்தினம்! அவளுக்கு இந்த மாமனார், மாமியார் பேரில் இருந்து வரும் எரிச்சலுக்குத் தகுந்தாற்போல் இப்போது பெண் தேடும் இந்த அலைச்சல்களைப் பார்க்கும் போது அது அதிகமாகிக் கொண்டு வந்தது.

“…..என்னமோ சொலவாந்தரம் சொன்னாப்ல, ஊரு ஒலகத்துல இப்படி ஒரே முட்டாச் சுத்தியிட்டுத் திரிஞ்சவிகளெ நாங்க கண்டதில்லே! எங்கியோ ஒண்ணே இந்த உள்ளூருக்குள்ளாகவே பத்து முடிச்சுட்டுப் போறதெ வுட்டுப்போட்டு என்னமோ…பெருசா…?”

தன் போக்கில் திட்டிக்கொண்டிருப் பவளாகத் தென்பட்டாள்.

குளத்துப்பாளைத்திலேயே பெண் தரச் சம்மதிக்கும் குடும்பங்களும் இருந்தன. அதுகளிலெல்லாம் மாசய்யனுக்குச் சம்மதம் இல்லை, சொத்து பத்துக்கள் சுமாராகத்தான் கிடைக்கும் என்றாலும், இந்தக் குடும்பத்துக்கு ஏற்றாற்போல் நன்றாகப் பாடுபடக் கூடிய சூட்டிப்புக் கொண்ட பெண்கள் இருக்கத்தான் செய்தனர்.

மூத்த மகன் நமச்சிவாயத்துக்கு வெள்ளலூரில் வரன் வாய்த்தது. நாகரத்தினத்தின் உருவில் அது அமைந்தது. இத்தனை அலைச்சல் அதில் இல்லை.

“கங்கண யோகம் கூடி வந்துச்சுனா அப்புறம் அது தன்னெய்ப்போல நடந்து முடிஞ்சுடுமுங்க….”

பக்கத்துக்காட்டு ஆறுமுகம் சொன்ன ஆருடம் கூட சரியாகத் தான் நடந்தது போலிருந்தது.

குனியமுத்தூர் மில்லுக்கு போய்க் கொண்டிருக்கும் பங்காளிகளின் வீடுகளில் வயதுக்கு வந்த பெண்கள் இருந்தனர்! அவர்களுக்கும் அக்கம் பக்கத்திலிருந்து மாப்பிள்ளைகளும் வந்தவாறுதானிருந்தனர்.

இதைக் கேள்விப்பட்ட மாசய்யனுக்கு “மில்லு வேலை அது இதுன்னு போயி மாசச் சம்பளம் வாங்கிட்டு வர மருமகளா தேடுவீங்க! வூட்டோட இருந்து நம்ம பாடு பழமைகளைப் பாத்துட்டு காடுகரைக்கும் சலிக்காத ஒருத்தியா இருந்தாப்போதும்னுதான் பிரியப்பட்டேனுங்க” என்று சொல்லத் தோன்றியது.

மறுநாள் மத்தியானம் வீடு வந்து சேர்ந்து குடையை மடக்கி எர வாறத்தில் மாட்டிவிட்டு “முருகம்மா” எனக்குரல் கொடுத்தவராகத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார் மாசய்யன்.

“ஓ…! வந்துடீங்களா….?”

உள்ளேயிருந்து எட்டிப் பார்த்தபடி கேட்டுவிட்டு சொம்பில் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் முருகம்மா!

அதை வாங்கி அண்ணாந்து குடித்துவிட்டு  “ வெடியால அங்கேயிருந்து கௌம்புனவன் ஊடு வந்து கால் முதிக்க இந்நேரம் ஆயிடுச்சு…” என்றவாறு சர்ட்டைக் கழட்டி கொடியில் போட்டு விட்டு “எங்கே மத்தவிக ஒருத்தரையுங்காணமே…” எனக் கேட்டார்.

“…சுப்பையன் ஆடுகளெ ஓட்டிட்டுப் போனான்! நேத்தைக்கு இந்தப் பக்கம் பேஞ்ச மழை, ஒழவு மழைக்கு இருக்குமுங்க. மலையடிவாரத்துக்காடுகள்லெ இன்னமும் எச்சாவே இருந்திச்சின்னு ஆடுகளைக் கொண்டாந்து கட்டுத்தறி சேர்க்கிறதுக்குள்ளே மொடையாப் போச்சுன்னு அவன் சொன்னான்…”

“ஓஹோ…! தேவுலையே! அதுதா பஸ்ஸைவுட்டு எறங்குனதுமே பாத்தே! அங்கங்கெ குழி குண்டுகள்லெ தண்ணி நின்னுது. இங்கெ பேஞ்ச மழ பாப்பம்பட்டிப் பக்கமெல்லாம் இல்லே! ச்..செரி சின்னவன் காலேஜிக்குப் போயிட்டானா…?”

“ம்….ம்.. அவன் போயிட்டான். என்னமோ பரீட்சை எழுத பணம் கட்ட வேணும்னு கேட்டானுங்க. உங்க அய்யன் வந்தப்பறம் கேட்டு வாங்கிக்க அப்படின்னேன்!”

“அட! அதுக்கு என்னெய எதுர்ப் பார்க்குலீனா என்ன? பொட்டியில பணம் இருந்துச்சே! எவ்வளவு அப்படின்னு கேட்டு நீயே எடுத்துக் குடுத்திருக்கலாம் அல்ல!”

சொல்லியபடி வாசலுக்கருகில் இருந்த சிமெண்ட் தொட்டிக்குப் போய் கை கால் முகம் கழுவினான்.

வெளிக்காரியமாகப் போயிருந்த நமச்சிவாயம் மொபட்டில் வந்து இறங்கினான். தென் புறமிருந்த கொட்டாரத்து நிழலில் அதைத் தள்ளிக்கொண்டு  சென்று நிறுத்திவிட்டு வந்தான்.

அய்யன் வந்து விட்டதைப் பார்த்த போதிலும் ‘போன காரியம்’ என்னவாயிற்று? என்பதைப்பற்றி எதுவும் விசாரிக்கவில்லை.

“வந்துட்டீங்களா அய்யா!”

பொதுவாகக் கேட்டு விட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான்.

“இப்பத்தா வந்து சேர்ந்தே”

தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு சமையல் கட்டுக்குச் சென்றார் மாசய்யன்.

அவனாகவே அக்கறைப்பட்டு வந்து விசாரித்தால் ‘போய் வந்த விஷயம் என்னவாயிற்று’ என்கிற விபரத்தைச் சொல்லலாம் என சாப்பிட்ட வாறே எதிர்பார்த்தார் அவர்.

அப்படி அவன் வராதது அவருக்குச் சங்கடத்தை உண்டாக்கத் தவறவில்லை.

“… பொறந்தவன்காரன் பேர்ல அக்கறை எப்படி இருக்குதுன்னு பாரு? இப்படியாப்பட்டவனெல்லா எங்க நம்ம கூடமாட வந்து பிரயத்தனப்படுவான்? தானுண்டு தன்னோட பொழப்புண்டுங்கற கணக்குல போயிட்டு வந்துட்டு இருக்குறானுக..”

மனதில் திரண்ட எண்ணத்தை வெளிபடுத்திக்கொள்ளவில்லை. மாறாக,

“…ரசத்துக்கு இத்தனை காரத்தை எதுக்குப்போட்டு வெச்சே! தகதகன்னு புடிக்குது”

முருகம்மாளைக் கடிந்து கொண்டார்.

“ஒரு ரெண்டு மொளகா எச்சாப் போச்சுங்க! அதுதா ‘சுருக்’னு ஆயிட்டது. ரசத்தை நா எடுத்துக்கறேன். மோரு கூட இருக்கு. கரச்சு உண்ணுங்க…”

மோருடன் சாபிட்டது காரத்தைச் சற்றுத் தணித்து ஆசுவாசப்படுத்தியது.

வாசலுக்கு வந்து வாய் கொப்பளித்துவிட்டு மேற்குப்புறம் திரும்பி திண்ணையைப் பார்த்தார்! மகன் இல்லை.

“நாமளா உன்னே கூப்புட்டு இப்படியிப்படின்னு சொல்லுலையேன்னு சங்கடமா எந்துருச்சுப் போயிட்டானாட்ட மிருக்குது. ச்..செரி! கெடக்குது போ! சாய்ங்காலமா எல்லாரும் ஊடு வந்து சேர்ந்த பொறகு ஒண்ணாவே சொல்லிட்டாப் போகுது போ..”

நினைத்தவாறு கட்டிலில் படுத்தார்.

வாசலில் காலடிச் சத்தம் கேட்டது.

இரண்டு டின்களில் மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு மருமகள் நாகரத்தினம் வந்தாள்.

“…அதை ஏங்கேக்கற போங்க! ரேஷன் கடைல ஒவ்வொருத்தி மூணு நாலு கூப்பனுகளே வெச்சுட்டு நிக்கிறாளுக. நம்மளாட்ட ஒண்டி சண்டியெல்லாம் போனாக்க எண்ணெய் தீந்து போச்சுன்னு திருப்பித் தாட்டி உட்டுருவானுக…”

பக்கத்து வீட்டுக்காரியிடம், ரேஷன் கடையில் உள்ள சிரமங்களைச் சொல்லி யவாறு அவள் வரும் போதே, முருகம்மாளுக்கு அது கேட்டது.

“…வீட்டிலிருக்கும் இன்னொரு கூப்பனையும் எடுத்துக் கொண்டு போகச் சொல்லியிருக்கலாமே…” என எண்ணியபடி வட்டிலைக் கழுவி வைத்து விட்டு, வீட்டுக்குள் சென்றாள்.

(தொடரும்)