“உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்க தடை”

ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களில் தனியாக சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்களில் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் நிலையில் அது அமலாவதற்கு முன்பு வசூலிக்கப்பட்ட சேவை வரி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஹோட்டல்கள் அல்லது உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வேறு பெயர்களிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சேவைக் கட்டணத்தை வாடிக்கையாளர்களே தர விரும்பினால் கொடுக்கலாம். அது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கே விடப்படுகிறது.

உணவு கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பிறகும் உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால், பில் கட்டணத்தில் இருந்து அதை நீக்குமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கலாம். தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915க்கும் வாடிக்கையாளர் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். NCH செயலி மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் என கூறியுள்ளது.