தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 15 ஆயிரம் டன் அரிசி அனுப்ப ஏற்பாடு

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு 15 ஆயிரம் டன் அரிசி, பால்பவுடர், மருந்து பொருட்கள் ஆகியவை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இலங்கை வாழ் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்
ஆகியோர் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைக்கின்றனர்.

அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் இலங்கைக்கு மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.