ரத்தினம் கல்லூரியில் யோகாசன போட்டி

கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியானது பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டம் வழிகாட்டுதலின் அடிப்படையில் கோவை ஓசோன் யோகா பயிற்சி பள்ளியுடன் இணைந்து ரத்தினம் கல்லூரி ஒருங்கிணைத்தது.

கல்லூரி முதல்வர் முரளிதரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ரத்தினம் பன்னாட்டு பள்ளியின் முதல்வர் ஆஸ்மி சரீப் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுந்தராபுரம் லயன்ஸ் கிளப் கொங்கு மற்றும் பசுமை தேசம் அறக்கட்டளை சார்பாக சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியானது ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதாவது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 6 முதல் 12 வயது, 13 முதல் 18 வயது, 19 முதல் 30 வயது, மற்றும் 30 வயதிற்கு மேற்பட்டோர் என சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் இருந்தும், 20க்கும் மேற்பட்ட யோகா பயிற்சி பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரத்தினம் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் பரிசுகளை வழங்கினார்.