நலத்திட்டங்கள் துவக்க மோடி வருகை

பிரதமர் மோடி, 11 நலத்திட்டங்களை துவக்கி வைக்க இன்று சென்னை வருகிறார். மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு துறைகள் சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்துக்கு  மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

அதன் பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக  பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். நரேந்திர மோடி, வருகையையொட்டி  அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

மேலும், போக்குவரத்து மாற்று ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து, அங்கிருந்து சாலை வழியாக  நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அவர் செல்ல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நேரு ஸ்டேடியத்துக்கு மாலை 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான, 11 நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதனால், சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார். 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஐந்து  கூடுதல் கமிஷனர்கள், எட்டு  இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்களின்  மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கமாண்டோ படை வீரர்கள், ஆயுதப்படை வீரர்களும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பெரியமேடு பகுதி, பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருவதால், சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பெரியமேடு பகுதியைச் சுற்றியுள்ள ஈ.வெ.ரா சாலை, தாஷ்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி வரையிலான சாலையில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.