நீதிபதி முகமது ஜியாவுதீனுக்கு ‘மனிதநேய மாமனிதர்’ விருது

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மனிதநேய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிப்பாளையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் காவேரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை காப்பாற்றிய வேற்படை தீயணைப்பு வீரர்களுக்கும், கொரோனா பொது முடக்கத்தின் போது, பொதுமக்களுக்கு சேவை செய்தவர்களுக்கும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஆணவக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதாடிய ப.பா.மோகன், மூத்த வழக்கறிஞர் திருமலை ராஜன், பவானி வழக்கறிஞர் கார்த்திகேயன், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மனிதநேய விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மனித நேயர் என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை ஈரோடு மூத்த வழக்கறிஞர் திருமலை ராஜன், ப.பா. மோகன் ஆகியோர் வழங்கிய போது, மனிதநேய மாமனிதர் என்று நீதிபதி முகமது ஜியாவுதீனை பாராட்டினார்கள்.