பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? – உச்சநீதிமன்றம் கேள்வி

பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுப்பது என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

உச்சநீதி மன்றமே தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதில், தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல் என தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம், ஆளுநர் உத்தரவுக்காக எத்தனை முறை வழக்கை ஒத்தி வைப்பது எனவும், மாநில அமைச்சரவையின் முடிவு ஆளுநருக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றால் அதனை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

அமைச்சரவைக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரமில்லை. பேரறிவாளன் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் ஆளுநரின் பதில் முரணாகவே இருக்கிறது என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

மேலும் நாங்களே ஏன் அவரை விடுவிக்க கூடாது என்றும், அவரை விடுவிப்பது ஒன்றே தீர்வு எனக் கருத்துவதாகவும் தெரிவித்துள்ளது. பேரறிவாளனை விடுவிப்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.