ஏன் வெயிலை திட்டக்கூடாது?

ஆண்டு விடுமுறை அறிவித்ததும், கட்டவிழ்த்து விட்ட குதிரைகள் போல் வீட்டிற்கு ஓடிவந்து ‘புத்தக மூட்டையை அடுத்த 2 மாதங்களுக்கு தொடப்போவதில்லையடா இறைவா!’ என்று பெருமூச்சு விட்டு, அந்த மாலை முதல் அடுத்த 50 நாட்கள் வெயிலில் வீதியில் ஓடி ஆடி விளையாடி கழித்த நாட்கள் ஞாபகம் உண்டா?

அப்போது மழை வந்தால் மட்டும் தான் திட்டத்தோன்றும், மத்தபடி வெயில் திகட்டாத காலம் தான். கையில் கிரிக்கெட் பேட் அது இல்லையென்றால் இரண்டு தேங்காய் மட்டை, ஒரு டென்னிஸ் பந்தை எடுத்துக்கொண்டு அந்த சைக்கிளில் பறந்து சென்று ஆடிப்பாடியது வெயில் காலத்தில் தானே?

இளநீர், பால் ஐஸ், ரஸ்னா, தர்பூசணி இதெல்லாம் அம்மாவின் அனுமதியோடு வெயில் காலத்தில் தானே ஆசைதீர அனுபவித்தோம்? அப்போது நாம் கொண்டாடிய வெயிலை இப்போது அனைவரும் எண்ணி வருந்துவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், ஏதோ க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் (Green house gas) அதிகரிப்பு என்கிறது அறிவியல்.

அதென்ன க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் ?

பூமிக்கு வெளியே உள்ள வளிமண்டலத்தில் (atmosphere ) மீத்தேன், ஓஸோன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் இயற்கையாகவே இருக்கும். இவற்றை தான் க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் என்று அழைக்கின்றனர்.

காலையில் கிடைக்கும் சூரிய ஒளியிலிருந்து பெரும் வெப்பம் முழுதுமாக பூமிக்குள் வராமல் தடுக்க இந்த வாயுக்கள் உதவும். மேலும் காலைநேரத்தில் இவை சூரிய வெப்பத்தை தனுக்குள் வாங்கிக்கொண்டு இரவு நேரத்தில் மெல்லமாக வெளியிடும்.

இந்த வாயுக்கள் மட்டும் இல்லையென்றால், பூமியின் சராசரி வெப்பநிலை குறையும். இப்போது, ​​சுமார் 57 டிகிரி பாரன்ஹீட் (14 டிகிரி செல்சியஸ்) உள்ளது. இது 0 டிகிரி ஃபாரன்ஹீட் (மைனஸ் 18 டிகிரி செல்சியஸ்) வரை குறையலாம். அப்போது நம் வானிலை லேசானது முதல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். நம்முடைய அன்றாட வாழ்க்கையை வாழ்வது மிக பெரும் சவாலாக இருக்கும். எங்கும் ஐஸ் கட்டி தான்!

நடப்பது என்ன?

நாம் வாகனங்களுக்கு உபயோகிக்கும் எரிபொருள், மின்சாரம் தயாரிக்க உபயோகிக்கும் நிலக்கரி, பெரும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை போன்றவற்றிலிருந்து க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளிவரும்.

இவை வளிமண்டலத்தில் சேரும் போது அவை பின் நாட்களில் அதிகமான வெப்பத்தை பூமிக்கு அனுப்பிவைக்கும். இதுதான் தற்போது நாம் வெயிலை திட்ட காரணமாக உள்ளது.

2022ம் அதற்கு பின்னும்:

கடந்த உஷ்ணமான ஆண்டுகளுக்கு நடுவே 2022 என்பது மிகுந்த உஷ்ணமான ஆண்டாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர வெப்ப நிகழ்வுகள் இந்தாண்டு கட்டாயம் இருக்கும்.

காலநிலையை நம்முடைய சுயநலத்தால் தீண்டிவிட்டதால் அவற்றின் முரண்பாடுகள் பெரிதும் அதிகரித்துள்ளது .

காலநிலை மாற்றத்தில் நாம் அவசரமாக செயல்படத் தொடங்கினாலும், வரும் ஆண்டுகளில் நாம் அடிக்கடி கடுமையான வெப்ப அலைகளை அனுபவிப்போம். 2022க்கு பின்னர், வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுவதை நிறுத்தும் வரை தொடர்ந்து பூமி வெப்பமடைவதைக் காண்போம்.

இவ்வாறு நேர்வதால் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் அழிந்து வருகிறது என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தெரிவிக்கிறது. இந்த வெப்ப அதிகரிப்பு குறைந்தது 10,967 இனங்களை பாதிக்கிறது, கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால் நீர்வாழ் ஜீவன்களும், காட்டுப்பகுதியில் வறட்சியினால் காட்டுத்தீ பற்றி வனவிலங்குகள் அங்குவாழ சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

பனிப்பிரதேசங்களில் பனி பாறைகள் உருகி, அங்குள்ள சூழலை மாற்றி, அங்கு வாழும் விலங்கு இனங்களையும் ஆபத்து நிலைக்குள் தள்ளிவிடுகிறது.

தீர்வு உண்டா?

பெட்ரோல், டீசல் ஆகியவைக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நல்ல அளவிற்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். மின்சார வாகனங்களாக இருந்தாலும் அவை நிலையான சுத்தமான முறையில் கிடைப்பதாக இருக்கவேண்டும்.

வெறும் தொழிற்சாலைகள் மட்டுமல்ல, வீட்டில் நாம் உபயோகிக்கும் எரிபொருள் மூலமாகவும், கழிவுகள் மூலமாகவும், சில விவசாய முறைகள் வழியாகவும் கூட பூமி வெப்பமயமாகும் என்பதை அறிவீர்களா?

அறிவியல், அரசாங்கம், அதனுடன் நாமும் நிலையான முயற்சிகளை கையில் உடனே எடுத்தாலொழிய இதை சரி செய்ய முடியாது. தவறை நம்மீது வைத்து வெயிலை திட்டுவது சரியா?

இதையெல்லாம் செய்வது சாத்தியமா என்று காலம் தளர்த்தினால், கொரோனா பெருந்தொற்று போல் ஏதாவது ஒரு பேரழிவு நேர்த்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய சூழல் எழுமோ என்னவோ!

 

 

எழுத்து – சு. டேவிட் கருணாகரன்
படங்கள் – National Geographic, BBC Earth