வேலை கிடைக்கும் நம்பிக்கையை இழந்த இந்தியர்கள் – பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றசாட்டு

மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனமான ‘இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) பிரைவேட்,’ சமீபத்தில் ஆய்வு முடிவை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வேலை செய்யும் வயதில் உள்ள 90 கோடி இந்தியர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலையை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

பலர் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டனர் என்றும், அவர்கள் வேலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருக்கலாம் அல்லது வேலைகள் போதிய அளவில் இல்லை என்ற நம்பிக்கையில் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புதிய இந்தியாவின் புதிய முழக்கமாக ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. பிரதமர் மோடியின் அதிரடி முடிவுகளால் நாட்டில் 45 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். 75 ஆண்டுகளில், இவ்வளவு பேரின் நம்பிக்கை இழப்புக்கு காரணமான, நாட்டின் முதல் பிரதமர் மோடி ஆவார்” என்று கூறியுள்ளார்.

“நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 45 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர்”. என வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, ட்விட்டர் பதிவுடன் இணைத்துள்ளார்.

இது குறித்து சி.எம்.ஐ.இ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 46 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக 2017-2022 க்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்துள்ளது.

சுமார் 2.1 கோடி பேர் தொழிலாளர் தொகுப்பில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும், 9 சதவீதத்தினரே வேலை தேடுவதோ அல்லது வேலை செய்துகொண்டோ உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மார்ச் 2022ல் தொழிலாளர் எண்ணிக்கை 42.8 கோடியாக சுருங்கிவிட்டது. இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 38 லட்சம் குறைந்துள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் மிகக் குறைவு. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இந்தியா 2030 ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 9 கோடி புதிய வேலைகளை உருவாக்க வேண்டும், அதுவும் விவசாயம் சாராத துறைகளில். ஆனல், அதற்கு வருடாந்திர ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை தேவைப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இளம் திறமைசாலிகள் இப்போது தீவிரமாக வேலை தேடுவதையும், அவர்கள் தங்கள் தொழிலாக புதிய கம்பெனிகள் மற்றும் தொழில் முனைவோராகவும் விரும்புகின்றனர். அதன் காரணமாகவே, வேலை தேடுவோர் எண்ணிக்கை கடுமையான சரிவை கண்டுள்ளது என்று இது தொடர்பாக ஆய்வு நடத்தும் வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.

வேலையில் பெண்களின் பங்களிப்பு குறித்து CMIE இன் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர் படையில் சேர்வதில்லை, ஏனெனில் வேலைகள் பெரும்பாலும் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை. உதாரணமாக, வேலைக்கு வருவதற்கு இரண்டு மூன்று ரயில்கள் மாறி வருவதற்கு கூட ஆண்கள் தயாராக உள்ளனர். பெண்கள் அவ்வாறு செய்ய விரும்புவது குறைவு என்றார்.

மேலும், பல தொழில்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. 9% பெண்கள் மட்டுமே தகுதியைப் பொருட்படுத்தாமல் வேலை அல்லது வேலையைத் தேடுகின்றனர் என்றார்.