கோவை புத்தக திருவிழாவை முன்னிட்டு கலந்துரையாடல்

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 20-ஆம் தேதி துவங்க இருப்பதையொட்டி புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள், இணையதள எழுத்தாளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி காஸ்மோபாலிடன் கிளப்பில்  நடைப்பெற்றது.

இந்த சந்திப்பில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் எழுத்தாளர்களும், வலைப்பதிவர்களும் பெருவாரியாக கலந்துகொண்டனர். கவிஞர் கவிதாசன் வரவேற்புரை ஆற்றினார். புத்தகத் திருவிழாவின் தலைவர் எஸ். செளந்தரராஜன் புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாடுகளை விவரித்தார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறவிருக்கும் புத்தகத் திருவிழாவில் 265 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ் மட்டுமல்லாது இந்திய மொழிகள், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளைச் சேர்ந்த பதிப்பகங்களும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க உள்ளன. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், உரைகள், எழுத்தாளர் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் இயகாகோ சுப்ரமண்யம், அறிவுக்கேணி ஒருங்கிணைப்பாளர் சி.ஆர். இளங்கோவன், சி. வேலுமணி, ஆகியோர் அறிவுக்கேணி, இலக்கியக்கூடல், தொழிலாளர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்,  தினசரி நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் குறித்தும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவரித்தனர். தொடர்ந்து இலக்கிய அமைப்பினரின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புத்தகத் திருவிழாவை ஆர்வமூடன் நடத்தி வரும் கொடீசியா அமைப்பினரை இலக்கிய ஆர்வலர்கள் பாராட்டினார்கள். மிகப்பெரிய ஒத்துழைப்பினை நல்குவதாக உறுதியளித்தார்கள்.

புத்தகத் திருவிழா துணைத்தலைவர் விஜய் ஆனந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.