டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் 4வது அலை ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 12% அதிகரித்துள்ளது. மேலும், பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு புதிய பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

ஒட்டுமொத்தமாக டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 68 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது. 26 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழன் அன்று பாதிப்பு 325 ஆகவும், வெள்ளியன்று 366 ஆகவும், சனிக்கிழமை 461 ஆக வும் டெல்லியில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. தொடர்ந்து கணிசமாக பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த 2ம் தேதி வெளியான அறிவிப்பில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.