பொற்கால ஆட்சியின் திறவுகோலாக பட்ஜெட் தாக்கல் அமைந்துள்ளது – நா.கார்த்திக்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அமைந்திருக்கிறது என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :

இந்த ஆண்டு 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துள்ளது. வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8%-லிருந்து 3.8% ஆக குறையும்.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும்.

2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி

மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்காக, தகுதிவாய்ந்த பயனாளிகளைக் கண்டறியும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்வதற்காக, அரசு துறைகளுக்கு மின்னணு கொள்முதல் கட்டாயமாக்கப்படும். ஊழல் தடுப்பு பணிகள் இன்னும் வலுபடுத்தப்படும்.

6 புதிய கூட்டு குடிநீர் திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீர் சேமித்தல் , நீர் மேலாண்மைக்காக 3,384 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அரசுப்பள்ளி அல்லாத பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

அடுத்த 5 ஆண்டுகளில், அரசுப்பள்ளிகளை நவீன மயமாக்கிட பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஐந்து ஆண்டுகளில் 7,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டில் இத்திட்டத்திற்காக 1,300 கோடி ஒதுக்கீடு

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு 20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி. வரும் நிதியாண்டில் மேலும் 1,000 வீடுகள் 50 கோடி மதிப்பில் கட்டித்தரப்படும்.

முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கான பயிர்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு

தந்தை பெரியாரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் எல்லோருக்கும் கொண்டு செல்லும் வகையில் தந்தை பெரியாரின் கருத்துகளை இந்திய மற்றும் உலகின் 21 மொழிகளில் அச்சுமாற்றம் செய்வதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல, முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடவேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறது இந்த பட்ஜெட். இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயனடைவார்கள். பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக பட்ஜெட் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஏழைகளின் நலன், ஊழலற்ற நிர்வாகம் , இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் ஒவ்வொரு சிந்தனையிலும், செயலிலும் சுய மரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிட கொள்கைகள் நிறைந்திருக்கின்றன. முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையாக கிடைக்கப் பெறச் செய்த முதல்வருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.