அன்புள்ள ரஜினிகாந்த்…

நாட்டில் எது நடந்தாலும் பேசாமல் இருந்ததற்கான காரணமும், யார் பின்னணியில் இவர் இயங்குகிறார் என்பதும் தற்போது தௌ¢ளத் தெளிவாக ஊருக்கே விளங்கிவிட்டது. ஆம். ‘பாஜக தங்களை இயக்குகிறதா?’ என்ற கேள்விக்கு ‘என் பின்னே ஆண்டவன் இருக்கிறான், தமிழக மக்கள் இருக்கிறார்கள். வேறு யாரும், எந்தக் கட்சியும் இல்லை’ என்றார். ஆனால் தூத்துக்குடி பேச்சில் இருந்து, இவரது பின்னால் யார் இருக்கிறார், யார் சொல்லி இவர் பேசுகிறார், யாரை இவர் நம்புகிறார் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. அத்துடன், பொதுச்சபையில் எதிர் கேள்வி கேட்பவர்களிடம் இவருக்கு எந்தளவுக்கு பேசத் தெரியும் என்பதும் தெளிவாகிவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மருத்துவ மாணவர்களிடையே பேசுகையில், ‘ஆங்கிலம்தான் முக்கியம். மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது’ என்றபோதே இவர் சார்ந்த திரையுலக பிரபலங்களே இவரது கன்னிப்பேச்சை விமர்சித்தனர்.

இவர் மனைவி நடத்தும் பள்ளிக்கு உரிமையானவர் என்ற முறையில், மாணவர்களுக்கு இவர் செய்தது என்னவென்று தெரியவில்லை. கல்வி முறை, அதிலுள்ள அரசியல், அதில் மாணவர்களை பலிகடா ஆக்கும் வன்மம் என எதுவும் அறியாமல், குறைந்தது தனது பள்ளியில்கூட இலவசக் கல்வி வழங்காமல் கல்வி, மாணவர்கள் குறித்து இவர் பேச வேண்டிய அவசியம் என்ன-?.

கட்சியின் கொள்கை குறித்து கேட்டதற்கே இவருக்குத் தலைசுற்றுகிறது. இந்நிலையில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் இவரது ஆதரவு உண்மையில் மக்களுக்கானதா என்பது இன்னும் குழப்பமே. ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களின் அவலநிலை, மரணம் குறித்து இதுவரை இவர் கவலைப்பட்டதாக, ஏன் பேச்சுகூட இல்லை. மௌனமே.

ஆனால் ‘காலா’வுக்காக தெருவில் நின்று, ‘நான் என்ன சொல்லிவிட்டேன். ஏன் படத்தை வெளியிட மறுக்கிறீர்கள்?’ எனக் கூப்பாடு போட்டார். நடந்த, நடக்கும் ஆட்சி மற்றும் அதிகார அவலங்கள் குறித்து இவர் அறிந்திருந்தால், ‘எல்லோரும் நல்லவர்கள்’ எனக் கூறமாட்டார். தங்கள் எதிர்காலத்திற்காக உண்மையாகப் போராட யாரும் இல்லாதபோது, மாணவர்கள் தங்களுக்காக, தங்கள் உரிமைக்காக போராடக்கூடாது என்றால், அவர்களது எதிர்காலத்திற்கு இவர் என்ன செய்யப் போகிறார் என்பதைத் தெளிவுபடுத்தலாம். ‘எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் படிக்க மட்டும் செய்யுங்கள்’ என்கிறார்.

கட்சியும் இல்லை, கொள்கையும் இல்லை, திட்டமும் இல்லை, அரசியல் தெளிவும் இல்லை. இவ்வாறு எவ்வளவோ ‘இல்லை’கள் இவரிடம். இப்படி எதுவுமே இல்லாமல், 99 நாள் போராட்டத்தின்போதும் ஒன்றுமே செய்யாமல், மாணவர்கள், மக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த ஒரு பிரச்னையிலும் ஒரு வார்த்தைகூட கூறாமல் அமைதியாக இருந்துவிட்டு, எல்லாம் முடிந்தபிறகு சென்று நலம் விசாரித்தால் ‘நீங்கள் யார்?’ என்ற கேள்விதான் இவர் முன் நிற்கும். இக்கேள்வியைத் தவிர்ப்பதற்கு வழியேதுமில்லை.

‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’, ‘ஆண்டவன் சொல்லும்போது வருவேன்’ என்று இருக்கும் இவர், நடிகர் என்ற முறையில் சம்பாதித்த மக்கள் செல்வாக்கை வைத்து அரசியல் ஆதாயம் தேட, ‘எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன்’ என்கிறார். அவரும் நடிகர்தான். ஆனால் அவரின் அரசியல் பிரவேசம், அதற்கான முன்னேற்பாடுகள், முன்மொழிந்த மக்கள் சேவை என்னவென்பதை முதலில் இவர் அறிந்துகொள்ள வேண்டும்.

‘தேர்தல் வரட்டும். பார்த்துக்கொள்ளலாம். அதுவரை யாரையும் யாரும் குற்றம்சொல்லி பேச வேண்டாம். போராட்டம் வேண்டாம்’ என்கிறார். அப்படியென்றால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான பிரச்னைகளின்போதும், தங்களின் மீதான அடக்குமுறையின்போதும் என்ன பதில் உள்ளது இவரிடம். ‘அடுத்தவர்மீது பழிபோட்டு, அவதூறு பேசும் அரசியல் எனக்குப் பிடிக்காது’ என்கிறார். மகிழ்ச்சி. நல்லதொரு மாற்றத்திற்கு அடித்தளம்தான். ஆனால், நடைபெறும் மக்கள் பிரச்னைகளுக்கு, போராட்டங்களுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு, இவர் நல்லவராக இருக்கலாம். நட்டம் ஒன்றுமில்லை. நடப்பவை ஒன்றும் திரைப்படக் காட்சிகளும் அல்ல.

‘நடிகனாக பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்ச்சிப்படுத்த செல்கிறேன்’ என்றார்¢. அங்கே நடந்தது ‘ஐபிஎல்’ மேட்ச்சும் அல்ல, இவர் ஒன்றும் ‘சியர்ஸ் பாய்’ அல்ல. மகிழ்ச்சிப்படுத்த, உற்சாகப்படுத்த எனச் சொல்லி, எதிர்கால தலைமுறைக்காகத் தங்களது இன்னுயிரை விட்ட மண்ணின் மாண்பை இவர் அங்கு சென்று குலைத்துவிட்டார் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து.

காவல்துறைமீது இவரைவிட மக்களுக்கு அதிகம் மதிப்புண்டு. அதுமட்டுமல்ல, அவர்களின் மற்றொரு முகத்தையும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதே மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். ஒவ்வொரு நாளும் ‘ஹெல்மெட்’, ‘லைசென்ஸ்’ பிரச்னைகளுக்காக அவர்களை மக்கள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆதலால் ரஜினி ஐயா நீங்கள்தான் யாருக்காக பேசுகிறீர்களோ அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் போராட்டத்தின்போது நீங்கள் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், உங்கள் ரசிகர்கள் அப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, எப்பேர்ப்பட்ட பிரச்னைக்கும் எளிதில் தீர்வைக் கண்டிருப்பார்கள். அரசியலிலும் உங்களுக்கென தனி இடம் கிடைத்திருக்கும். அத்தகைய மக்கள் அபிமானம், ரசிகர்கள் படை உங்களுக்கு உள்ளது. உங்களின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கும் எத்தனையோ இலட்சக்கணக்கான ரசிகர்களை, அவர்களது நலனுக் காகக்கூட குரல்கொடுக்கச் சொல்லவில்லை என்பதே உங்கள் மீதான வருத்தமே. அவர்களை வெறுமனே உங்கள் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்ய மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். உங்களின் அகிம்சாவாதம் பெரிதென்றால், அதன் வலிமையிலாவது ஏதாவது ஒரு பிரச்னைக்கு நீங்கள் தீர்வு கண்டிருக்கலாம். அதையும் நீங்கள் செய்யவில்லை.

நல்லவர் என்பது மட்டுமே தலைவருக்கான தகுதியல்ல. எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன் என்கிறீர்கள். உங்களுக்கென்று தனி ‘ஸ்டைல்’, படை இருக்க, அதைப் பயன்படுத்தியே நீங்கள் ஒரு ஆட்சியை ஏற்படுத்த முடியும்போது, ஒப்பீடு தேவையில்லை உங்களுக்கு.

கட்சி தொடங்கவும், ஒரு பிரச்னைக்கு வாய் திறக்கவும் இவ்வளவுதூரம் பின்வாங்கி, எல்லோரையும் அனுசரித்து அமைதியாய் இருக்கும் நீங்கள் ஒருவேளை நாளை ஆட்சியில் அமர்ந்தால், ஒரு திட்டத்தைத் திடமாக உங்களால் செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் தெளிவுள்ளவர்களுக்கு திடமாகப் புரிந்துவிட்டது. ஆட்சியைப் பிடிப்பது ஒன்றும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆவதுபோல் அல்ல ரஜினி அவர்களே.

இங்கே அதிகார வர்க்கம், அரசு இயந்திரம் ஊழலில் திளைக்கிறது. யார் வந்தாலும், இங்கே எதனையும் மாற்ற முடியாது. இந்த சிஸ்டம்தான் சரியில்லை என்பது உங்களுக்கேத் தெரியும். அதை சரிப்படுத்தும் திட்டம் என்னவென்று கூறாமல், ‘சமூக விரோதிகள் யாரென்று தெரியும்’ என ஆவேசப்பட்டு பேசுவதால் ஒன்றும் நடக்காது.

சினிமாவில் இந்த ஆவேசப் பேச்சுக்கு ரசிகர்கள் கைதட்டுவார்கள்¢. ஆனால் வயதுக்கேற்ற முதிர்ச்சி, அரசியல் தெளிவு இல்லாமல், மக்களின் நாடி அறியாமல் சத்தமிட்டு, பின்னர் வருத்தம் தெரிவிப்பது உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் ரசிகர்களுக்கும், தமிழகத்திற்கும் இது நல்லது அல்ல..

‘காலா’வில் ‘நிலம் எங்கள் உரிமை’ என்று போராடியதெல்லாம் வெறும் கதாபாத்திரம்தான் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். உணராதவர்கள் இனித் தங்கள் வாழ்வை இழந்துவிடுவர். அவர்களைக் காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது.

உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் திரையுலகிலேயே மன்னனாக இருங்கள். அதுதான் உங்கள் தனி வழி. அங்கே நீங்கள் மட்டுமே தனிக்காட்டு ராஜா. வேண்டுமானால், தேர்தல் நேரத்தில் வழக்கம்போல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதுதான் நாட்டுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. பிறரின் சுயலாபத்திற்கு இறைவன் உங்களுக்கு அளித்த புகழைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் அன்புள்ள ரஜினிகாந்த்.