உழவே தலை; புதிய நம்பிக்கை

கோவையில் உழவே தலை என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்து முடிந்திருக்கிறது. அதை நடத்தியவர்கள் மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத் துறையோ, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமோ அல்ல. கோவை இந்தியத் தொழில் வர்த்தக சபை எனும் தொழில், வணிகம் சார்ந்த அமைப்பு. இக்கருத்தரங்கம் இரண்டாவது முறையாக நடைபெற்றது. சென்ற ஆண்டும் இது நடைபெற்றது.

ஒரு பக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய அளவிலேயே உழவுத்தொழில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை என்பது ஆண்டுதோறும் தொடரும் சோகமாக மாறிவிட்டது. மாநிலத்துக்கு மாநிலம் நமது காவிரி நீர் சிக்கல் போல தண்ணீர் சிக்கல்கள் தலைதூக்கி வளர்ந்து விட்டன. மழை அளவு குறைந்துகொண்டே வருகிறதோ என்று புரியாத நிலையில் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சில இடங்களில் இதன் நிலை அபாய கட்டத்தை எட்டியுமுள்ளது. இன்னொருபுறம், வேளாண் இடுபொருட்கள் விலை அதிகரிப்பு, திறன் மிக்க விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு, விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காதது என பல சோதனைகளால் விவசாயத்தை கைவிட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக வேறு தொழிலுக்கு போகும் பாரம்பரிய விவசாயிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.

மொத்தத்தில் வேளாண் துறையின் எதிர்காலம் என்பது சாதாரணக்கண் கொண்டு பார்த்தால் அச்சம் கொள்ளும் அளவு மோசமாக இருக்கிறது. இன்னும் ஒரு தலைமுறை கழித்து பார்த்தால் இந்தியா ஒரு வேளாண்மை சார்ந்த நாடாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துகொண்டே வருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அரசாங்கம் அதன் அளவுக்கு பல திட்டங்களை அறிவிப்பதும், ஒரளவுக்கு அவை செயல் வடிவம் பெறுவதும் நடந்து வந்தாலும் ஏதோ ஒன்று குறையாக அல்லது தடையாக இருக்கிறது. நேரடியாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்திட்டங்கள் இல்லாததும் இதற்கு காரணம் என்று தோன்றுகிறது. மேலைநாட்டுத் தொழில்நுட்பங்கள், வேளாண்மைக் கொள்கைகளை இங்கு நடைமுறைப்படுத்த முயலும்போது அதுவும் வெற்றி பெறாமல், ஏற்கெனவே இங்கு பாரம்பரியமாக இருந்த முறைகளும் சீர்கெட்டு வருகின்றன.

இந்த நிலையில் நம்மாழ்வார் போன்றவர்கள் இயற்கை வேளாண்மையை கையில் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யத் தொடங்கினர். இன்று ஓரளவு அது வெற்றி பெற்ற இயக்கமாகவே திகழ்கிறது.

இதன் முதல் வெற்றியே, இந்த ‘நவீன முறை வேளாண்மையானது’, இயற்கை வேளாண்மையைவிட தரம் குறைந்தது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதே என்று பலரையும் ஒப்புக்கொள்ள வைத்ததுதான். ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை இந்த வகையில் ஒருங்கிணைக்கும் பணி என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. அந்த ஒருங்கிணைக்கும் பணி இன்று ஓரளவு நிறைவேறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அதன் வெளிப்பாடுதான் இந்த உழவே தலை போன்ற நிகழ்வுகள். இது ஒரு வகையில் ‘கார்ப்பரேட்’ தனமானது என்று விமர்சிக்கப்பட்டாலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கவனிக்கும் அளவு வேளாண்மை இருக்கிறது என்பதோடு பாரம்பரியமாக வேளாண்மைத் தொழில் சாராதவர்களும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கான ஒரு தளமாக, கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இவை அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்ற முறையைப்போலவே இநத முறையும் வேளாண்மையை ஒரு தொழிலாகக் கொண்டு வெற்றி பெற்றவர்கள்,  நீரியல் நிபுணர்கள், சாதனை விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இது ஏதோ வேளாண்மைத் துறை தொடர்புடைய ஒன்று என்று எண்ணாமல் தொழில், வணிகத்துறையினரும் இதில் ஈடுபாடு காட்ட முன்வரும்போது நமக்கு ஒரு புதிய நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகிறது.

ஒரு விழாவோ, கருத்தரங்கமோ, மாநாடோ அது முடியும்போது அது என்ன செய்தியை மக்கள் மனதில் விதைக்கிறது என்பதில்தான் அதன் தரமும், வெற்றியும் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் கோவையில் நடைபெற்று முடிந்த உழவே தலை என்ற இக்கருத் தரங்கம் மக்கள் மனதில் வேளாண்மையின் முக்கியத்துவத்தை அழுத்தமாகவே விதைத்திருக்கிறது.

அதற்கு சாட்சியாக வேளாண்மையில் வெற்றிபெற்ற பலரும் கலந்து கொண்டது இந்த கருத்தாக்கத்தின் சிறப்பைக் கூடுதலாக்கி இருக்கிறது.